சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட கலெக்டர் அறிவுறுத்தல்
கரூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது அவர் தெரிவித்ததாவது:- 75-வது வருட சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை நாம் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில் துறை நிறுவனங்கள், காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள், அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்திலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி முதல் 17-ந் தேதி வரை தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
கலை நிகழ்ச்சிகள்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுதந்திர திருநாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைப்பதன் அவசியம் குறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.போக்குவரத்துத்துறையின் மூலம் 75-வது சுதந்திர தின விழாவை குறித்த பதாகைகளை பஸ்களில் பின்புறத்திலுள்ள விளம்பர பலகையில் பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சுவர் விளம்பரம்
பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் சுதந்திர தினம் வரலாறு குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் மூலம் 75-வது சுதந்திர தின விழாவை குறித்த சுவர் விளம்பரம் மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சுதந்திர போராட்ட வீரர்கள் பெற்றுத்தந்த சுதந்திர திருநாளை சந்தோஷமாகவும், மகிழ்வுடனும் கொண்டாடுவோம்,
இவ்வாறு அவர் கூறினார்.