அந்தியூர், தாளவாடியில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரி; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
அந்தியூர், தாளவாடியில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஈரோடு
அந்தியூர், தாளவாடியில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்தியூர்
சட்டசபையில் நடந்த உயர்கல்வித்துறையின் மானிய கோரிக்கையின்போது தமிழகத்தில் தாளவாடி, அந்தியூர் உள்ளிட்ட இடங்களில் புதிதாக 20 கலை-அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டிடங்களில் அரசு கலை-அறிவியல் கல்லூரி அமைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த கல்லூரிகளை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன்படி அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் அமைக்கப்பட்ட கலை-அறிவியல் கல்லூரியையும் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி அந்தியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதிய கட்டிடம்
அந்தியூரை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு தங்களது ஏழ்மையின் காரணமாக வெளியூர் சென்று படிக்க வைக்க முடியாமல் தங்களது குழந்தைகளின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். இனிமேல் அந்தியூர் பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை கல்லூரி வரை அந்தியூரிலேயே தொடர்ந்து படிக்க முடியும். தற்போது கல்லூரியானது அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய கட்டிடங்கள் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து வசதிகளுடன் கட்டப்படும்.
இவ்வாறு ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கூறினார்.
விழாவில் உயர்கல்வித்துறை கோவை மண்டல இணை இயக்குனர் உலகி, அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுமதி, கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் பழனிசாமி, அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி செல்வகுமார், தமிழ்நாடு கோ ஆப் டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், டாக்டர்கள் சம்பத்குமார், சக்தி கிருஷ்ணன், சதீஷ்குமார், அருள்மொழிவர்மன், வக்கீல் மோகனசுந்தரம், ராஜமாணிக்கம், வேம்பத்தி முருகேசன், செபாஸ்டியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தாளவாடி
இதேபோல் தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக அரசு கலை அறிவியல் அமைக்கப்பட்டது. இங்கு தற்போது மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். பின்னர் திகனாரையில் நடந்த திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழாவில் தி.மு.க. மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானிசாகர் தொகுதி பண்ணாரி எம்.எல்.ஏ., தாளவாடி ஒன்றிய செயலாளர் சிவண்ணா, ஒன்றியகுழு உறுப்பினர் ரத்தினம்மா காளநாயக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.