ராசிபுரம் அரசு கல்லூரியில் மரங்களை வெட்டி விற்றதாக முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம்


ராசிபுரம் அரசு கல்லூரியில்   மரங்களை வெட்டி விற்றதாக முதல்வருக்கு ரூ.2.18 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:47 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இருந்து 19 மரங்களை கடந்த அக்டோபர் மாதம் 14-ந் தேதி அனுமதியின்றி கல்லூரி முதல்வரால் வெட்டி விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில் ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா, நாமக்கல் வன கோட்ட அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பீடு ரூ.43 ஆயிரத்து 729 என்று வனத்துறையினர் அறிக்கையில் தெரிவித்தனர். இதன்படி வெட்டப்பட்ட மரங்களின் விலை மதிப்புக்கு ஈடாக 5 மடங்கு அபராத தொகையாக ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 645-ஐ கல்லூரி முதல்வர் பங்காரு இடமிருந்து வசூலித்து அரசு கணக்கில் செலுத்தும்படி ராசிபுரம் தாசில்தாருக்கு உதவி கலெக்டர் மஞ்சுளா உத்தரவிட்டார்.

மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக கல்லூரி வளாகத்தில் புதிதாக 190 மரக்கன்றுகளை நட்டு கல்லூரி நிர்வாகம் பராமரிப்பதுடன் கல்லூரி முதல்வர் பங்காரு மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் தர்மபுரி கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு உதவி கலெக்டர் மஞ்சுளா உத்தரவிட்டு அறிக்கை அனுப்பியுள்ளார்.

கல்லூரி வளாகத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக கல்லூரி முதல்வருக்கு அபராதம் விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story