கல்லூரி மாணவி பலாத்காரம்; 2 ரவுடிகள் கைது


கல்லூரி மாணவி பலாத்காரம்; 2 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கல்லூரி மாணவியை 3 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தப்பி ஓடியபோது கீழே விழுந்து கால்கள் முறிந்தன.

கோயம்புத்தூர்

கோவை

ஓட்டல் அறையில் அடைத்து வைத்து கல்லூரி மாணவியை 3 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தப்பி ஓடியபோது கீழே விழுந்து கால்கள் முறிந்தன.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தப்பி ஓடிய வாலிபர்கள்

கோவை ராமநாதபுரம் போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 2 பேர், போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதனை கண்ட போலீசார் சந்தேகமடைந்து அவர்கள் 2 பேரையும் துரத்தி சென்றனர். அப்போது தப்பி ஓடிய 2 பேரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

கால்கள் முறிந்தன

இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்தபோது கீழே விழுந்ததில் கால் எலும்புகள் முறிந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவையை அடுத்த கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) என்பதும், ரவுடிகளான அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் கல்லூரி மாணவி ஒருவரை ஓட்டலில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆங்கிலோ-இந்தியனான அந்த மாணவி கோவையில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்.

இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருவதால், மாணவிகல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.

பாலியல் பலாத்காரம்

இதையடுத்து அந்த மாணவி, தன்னுடன் படித்து வரும் மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள். அவர்கள் 2 பேரும், மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்த உதவுவதாக கூறி, கோவையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.

பின்னர் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

போலீசில் சிக்கினர்

அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை மாநகர கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோரை வலைவீசி தேடி வந்தனர்.

இதுகுறித்து அறிந்த ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகிய 2 பேரும் தலைமறைவானார்கள். இந்த நிலையில்தான், வாகன சோதனையின் போது அவர்கள் போலீசில் சிக்கினர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து சம்பவம் நடந்த ஓட்டலுக்கு போலீசார் சென்று சோதனை செய்தனர். இதில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் தங்கியிருந்த அறையில் உபயோகப்படுத்திய ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

----------------


Next Story