சேலம் சீலநாயக்கன்பட்டியில் கல்லூரி மாணவரை தாக்கி பணம் பறிப்பு நண்பர் உள்பட 5 பேர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டியில் கல்லூரி மாணவரை தாக்கி பணம் பறித்ததாக நண்பர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னதானப்பட்டி,
கல்லூரி மாணவர்
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). இவர் சேலத்தில் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு நேரம் போக வெள்ளி வேலையும் செய்து வந்துள்ளார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (20) என்பவரும் வேலை செய்யும் போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். வழக்கம் போல வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை குமரகிரி மலைப் பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
தாக்கி பணம் பறிப்பு
அங்கு பேசி கொண்டிருந்த போது, தமிழரசன் மற்றும் அங்கு இருந்த அவருடைய நண்பர்கள் சிலருடன் மணிகண்டனை தாக்கி அவரிடம் இருந்த ரூ.8 ஆயிரத்தை பறித்துக் கொண்டதாக தெரிகிறது. பின்னர் அனைவரும் தப்பி சென்றுள்ளனர். காயம் அடைந்த மணிகண்டன், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவரிடம் பணம் பறித்ததாக தமிழரசன், அவருடைய நண்பர்களான வெள்ளிப் பட்டறை தொழிலாளி மதன் (26), லேப் டெக்னீசியன் ஷாஜகான் (22), ஜிம் மாஸ்டர் முருகன் (23), எலக்ட்ரீசியன் ஏழுமலை (21) ஆகிய 5 பேரையும் நேற்று கைது செய்தனர்.