கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற நண்பர்கள்


கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற நண்பர்கள்
x

திருவெண்ணெய்நல்லூர் அருகே கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

கல்லூரி மாணவர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் அருண்குமார்(வயது 20). இவர் விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வந்தார். அருண்குமாரின் மொபட் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அவர் மொபட்டை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சில நாட்களுக்கு முன்பு டி.எடையார் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் வீரமணி(18) தனது நண்பர்களிடம் அருண்குமாரின் மொபட்டை திருடி மறைத்து வைத்திருப்பதாக பேசிக்கொண்டிருந்தார். இதை அங்கிருந்த மற்றொரு நண்பர் செல்போனில் பதிவுசெய்து அதை அருண்குமாரிடம் கொடுத்தார். இதையடுத்து வீரமணியை சந்தித்து தனது மொபட்டை தரும்படி அருண்குமார் கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவில் கரகாட்டத்தை காண அருண்குமார் சென்றிருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது அருண்குமாரை சிலர் அடித்து இழுத்து செல்வதாக அந்த வழியாக சென்றவர்கள் அவர்களிடம் கூறினா். உடனே இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் இரவு முழுவதும் அந்த பகுதியில் அருண்குமாரை தேடியும் அவரை காணவில்லை.

கிணற்றில் பிணம்

பின்னர் நேற்று காலையில் பனப்பாக்கம் ஏரி அருகே உள்ள கிணற்றில் அருண்குமார் இறந்து கிடந்ததை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று கிணற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்த அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் கோவில் திருவிழாவுக்கு சென்ற அருண்குமாரை வீரமணி பனப்பாக்கம் ஏரிக்கு வருமாறு அழைத்தார். அதன் பேரில் அங்கு வந்த அவரை வீரமணியும் அவரது நண்பர்கள் டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரத்ராஜ்(21) மற்றும் 16 வயது பிளஸ்-1 மாணவர், 17 வயது பிளஸ்-2 மாணவர், ராமு மகன் ராஜேஷ்(19), சக்திவேல் மகன் சந்திரசேகர்(19) ஆகிய 6 பேரும் சேர்ந்து திடீரென பெல்டால் கழுத்தை இறுக்கி அடித்துக்கொன்றனர். பின்னர் அருண்குமாரின் உடலை தரதரவென இழுத்துச்சென்று டி.எடையார் ஏரி அருகே உள்ள 20 அடி ஆழ கிணற்றில் தூக்கிப்போட்டுவிட்டு அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது.

சாலை மறியல்

இதுபற்றிய தகவல் அறிந்த அருண்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திருவெண்ணெய்நல்லூர்- திருக்கோவிலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பார்த்திபன், ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், செல்வராஜ், பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கிராமத்தில் கஞ்சா, சாராயம் அதிக அளவில் விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் இளைஞர்கள் கெட்டு போவதோடு, திருட்டு சம்பவங்களும் நடைபெறுவதாகவும், எனவே இதை கட்டுப்படுத்த வேண்டும், கொலைக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறினார்கள். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதன் பின்னர் கிராமமக்கள், இளைஞர்கள் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கொலைக்கு காரணமானவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

6 பேர் கைது

இந்த கொலை சம்பவம் குறித்து அருண்குமாரின் தந்தை முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் வீரமணி, சரத்ராஜ், ராஜேஷ், சந்திரசேகர் மற்றும் 16, 17, வயது மாணவர்கள் ஆகிய 6 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story