கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை


கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார்

தென்காசி

சிவகிரி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மேலூர் துரைச்சாமியாபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மகள் முருகஜோதி (வயது 20). இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் விடுமுறையில் கடந்த வாரம் மேலூர் துரைச்சாமியாபுரம் வந்தார்.

வீட்டிற்கு வந்ததில் இருந்து அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதனை தாயார் சண்முகத்தாய் கண்டித்தார். யாரிடம் இவ்வாறு அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டபோது எனது கல்லூரி தோழிகளிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று முருகஜோதி கூறியுள்ளார்.

இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகஜோதி வீட்டில் செல்போனை வைத்துவிட்டு வெளியே சென்றார். ஆனால் இரவு முழுவதும் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாயார் அதிகாலை 6 மணி அளவில் வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் பார்த்தபோது முருகஜோதி பிணமாக கிடந்தார்.

அந்த பகுதி தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் நிலைய எல்கைக்கு உட்பட்ட இடம் ஆகும். இதுகுறித்து சண்முகத்தாய் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் நவமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கிணற்றில் கிடந்த முருகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முருகஜோதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story