கல்லூரி மாணவி மர்ம சாவு
கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தார்.
கீழப்பழுவூர்:
கல்லூரி மாணவி
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபட்டாகாடு கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகள் கார்த்திகா(வயது 19). இவர் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்துவது தொடர்பான கூட்டத்திற்கு கணேசன் மற்றும் அவரது மனைவி சங்குமதி ஆகியோர் சென்றனர். கார்த்திகா வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்திருந்திருந்தார்.
கூட்டம் முடிந்து நள்ளிரவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது கார்த்திகாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள மாமரத்தின் கிளையில் தூக்குப்போட்ட நிலையில் கார்த்திகா தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி பார்த்தபோது, அவர் இறந்து விட்டது தெரியவந்தது.
நகக்கீறல்கள்
கார்த்திகாவின் கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்தன. மேலும் அவரது செல்போன் மற்றும் ஒரு தோடு ஆகியவை சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள சுண்ணாம்பு குவாரியில் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனால் அவரது சாவில் சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து திருமானூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.