ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது


ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது
x

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது.

திருச்சி

விரிசல்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், 7 திருச்சுற்றுகள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். மேலும் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலின் கிழக்கு வாசல் நுழைவு கோபுரம், கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் சாலையில் உள்ளது. இந்த கோபுரம் 8 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் கீழ் இருந்து ஒன்று மற்றும் இரண்டாவது நிலைகளில் உள்ள பக்க சுவற்றில்(கொடுங்கை) ஏற்கனவே சிறிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் கோபுரத்திற்கு சேதம் ஏற்பட்டு மேலும் இடிந்து விழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெயர்ந்து விழுந்தது

கடந்த 25-ந் தேதி கிழக்கு வாசல் நுழைவு கோபுரத்தின் முதல் நிலை பக்க சுவரின் மேற்புற சிமெண்டு பூச்சு பெயர்ந்து, சிறிய பாகங்கள் கீழே விழுந்தன. இதையடுத்து மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு கிழக்கு வாசல் கோபுரத்தை சீரமைக்க வேண்டும், அங்கு முளைத்துள்ள செடிகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உரிய மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.67 லட்சத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. அதற்கு யாரும் முன் வராத நிலையில், கோவில் நிர்வாகமே அதற்கான தொகையை ஏற்று பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இடிந்தது

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென கிழக்கு கோபுரத்தில் முதல் நிலையின் பக்க சுவர் இடிந்து விழுந்தது. இச்சம்பவம் நள்ளிரவில் நடந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இது பற்றி தகவல் அறிந்த கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிந்து விழுந்த கான்கிரீட் கட்டுமானம் மற்றும் கருங்கற்களை பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தினர்.

இது குறித்து கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 2015-ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கிழக்கு 6-வது கோபுரத்தின் முதல் நிலை கொடுங்கையின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதனால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோபுரத்தின் நிலை குறித்து தகவல் வெளியானது. உடனடியாக மராமத்து மேற்கொள்ள நன்கொடையாளர்கள் யாரும் முன் வராத காரணத்தால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

புதுப்பிக்கும் பணிகள்

இதைத்தொடர்ந்து கோவில் நிதியில் இருந்து ரூ.98 லட்சம் செலவில் உத்திரங்கள் மற்றும் மரச்சட்டங்கள் மாற்றப்படும். சிற்ப சாஸ்திர வல்லுனர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுனர்கள் குழு வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் கோபுரத்தை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணியானது ஆறு மாத காலத்தில் நிறைவடையும், பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதால் அந்த பகுதி சாலையை தற்காலிமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.

அதிகாரிகள் ஆய்வு

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலா பண்பாட்டு, அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் ஆகிேயார் அறிவுரைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், அந்த கோபுரத்தை ஆய்வு செய்தார். அப்போது தகுந்த தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று மராமத்து பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது தலைமையிட தலைமை பொறியாளர் இசையரசன், தலைமையிட செயற்பொறியாளர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், திருச்சி மண்டல செயற்பொறியாளர் தியாகராஜன் மற்றும் கோவில் பொறியாளர்கள் பிரிவு பணியாளர்கள் உடனிருந்தனர்.


Next Story