திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உருக்கமாக பேசி தந்தைக்கு `வாய்ஸ்மெசேஜ்' அனுப்பி விட்டு திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் அபிபோஸ்பான் (வயது 20). இவர் கடந்த 2 மாதமாக திருச்சி உய்யகொண்டான்திருமலை கணபதிநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பிஷப்ஹீபர் கல்லூரியில் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேசன் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாகவே இவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அபிபோஸ்பான் தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் சாப்பிட்டீர்களா?. நான் சாப்பிட்டுவிட்டேன். எனக்கு மனசு சரியில்லை என்று கூறி உள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
சிறிதுநேரம் கழித்து தனது தந்தையின் செல்போனுக்கு, "எனக்கு வாழப்பிடிக்கவில்லை. படிக்க பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்" என்று உருக்கமாக பேசி வாய்ஸ்மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை கேட்டு பதறிப்போன அவரது தந்தை, மகனின் நண்பருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவரது அறைக்கு சென்று பார்க்கும்படியும் கூறி உள்ளார்.
இதையடுத்து அங்கு சென்று கதவை திறந்து பார்த்தபோது, அபிபோஸ்பான் தூக்கில் தொங்கினார். உடனடியாக இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அபிபோஸ்பான் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.