வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர்-முதியவர் பலி


வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர்-முதியவர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர்-முதியவர் உயிரிழந்தனர்.

திருச்சி

திருவெறும்பூர்:

கல்லூரி மாணவர்

திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் லோகேஷ்(வயது 22). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கவுதம்(20). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அவர்கள் ஒரு ஸ்கூட்டரில் திருச்சியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே சென்றனர். அப்போது முன்னால் திருச்சியில் இருந்து திருவாரூர் நோக்கி ஒரு கார் சென்றது. திடீரென குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க காரை டிரைவர் திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

சாவு

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கவுதம் படுகாயமடைந்தார். லோகேசுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து கவுதமை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுதம் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து கவுதமின் உடலை துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து லோகேஷ் அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த தமிம்அன்சாரியை(47) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொபட் மோதியது

இதேபோல் தொட்டியம் அருகே உள்ள கவுத்தரசநல்லூரை சேர்ந்தவர் வேலுச்சாமி(70). இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் தொட்டியம் கடைவீதிக்கு வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மொபட் மோதியதில் தூக்கி வீசப்பட்ட வேலுச்சாமி சிகிச்சைக்காக நாமக்கல் மற்றும் சேலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேலுச்சாமியின் மகன் சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் மொபட்டை ஓட்டி வந்த நாகையநல்லூரை சேர்ந்த மணி மீது தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story