கல்லூரி மாணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை:ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி 60 பேரிடம் ரூ.2 கோடி மோசடி5 வங்கி கணக்குகள் முடக்கம்;


கல்லூரி மாணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை:ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி 60 பேரிடம் ரூ.2 கோடி மோசடி5 வங்கி கணக்குகள் முடக்கம்;
x

ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி 60 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்த கல்லூரி மாணவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை: நடத்தி வருகின்றனா்.

ஈரோடு

கல்லூரி மாணவரை போலீஸ் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி 60 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. அவரது 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கல்லூரி மாணவர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் வைரமுத்து பாலாஜி (வயது 23). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பார்மசி கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சஞ்சய் (23) என்ற மாணவர், ஆன்லைன் வர்த்தகம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் 40 நாட்களில் பணத்தை இரட்டிப்பு செய்து கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பி சஞ்சயிடம் வைரமுத்து பாலாஜி ரூ.49 லட்சத்து 10 ஆயிரத்தை பெற்றோர், உறவினர்களிடம் இருந்து வாங்கி கொடுத்து உள்ளார். ஆனால் பணத்தை சஞ்சய் திருப்பி கொடுக்கவில்லை.

இதுகுறித்து வைரமுத்து பாலாஜி கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கடந்த 6-ந் தேதி சஞ்சயை கைது செய்தனர். இந்த மோசடி வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? போன்ற விவரங்களை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக கைதான சஞ்சயை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

ரூ.2 கோடி மோசடி

இந்தநிலையில் சஞ்சயை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஈரோடு கோா்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் 3 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சஞ்சயை போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி சுமார் 60 பேரிடம் ரூ.2 கோடிக்கு மேல் சஞ்சய் மோசடி செய்தது அம்பலமானது. மேலும், மோசடிக்கு உதவியவர்களின் விவரங்களையும் சஞ்சய் போலீசில் கூறினார். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் 2 சொகுசு கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை முடிந்த பிறகு சஞ்சயை ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். சஞ்சயின் 5 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த மோசடியில் தொடர்புடைய நபர்கள் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story