பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; ரெயில் மீது கல்வீச்சு - பயணிகள் அலறியடித்து ஓட்டம்


பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்; ரெயில் மீது கல்வீச்சு - பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x

பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் மாணவர்களிடையே இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ரெயில் மீது கல்வீசப்பட்டது. இதனால் அச்சத்தில் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

சென்னை

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி நேற்று காலை 9 மணியளவில் புறநகர் ரெயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் ரெயில் நின்றபோது ரெயிலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கும்பலாக இறங்கினர். அப்போது, திடீரென ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளில் திட்டியவாறு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், சில மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கியும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சென்டிரலில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மீது மாணவர்கள் கற்களை வீசினர்.

இதனால், அந்த ரெயிலின் கண்ணாடி உடைந்து சேதமானது.

மாணவர்கள் கற்களை வீசி ஒருவருக்கொருவர் தாக்குதலில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். ஆனால், மாணவர்கள் அதற்குள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

மாணவர்கள் எந்த கல்லூரியை சேர்ந்தவர்கள், எதற்காக மோதிக்கொண்டனர் என்பது குறித்து ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து எந்தவித புகார்களும் இதுவரை வரவில்லை என்றும் ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story