மின்சார ரெயிலில் தொங்கிக்கொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியபடி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்
மின்சார ரெயிலில் தொங்கிக்கொண்டு பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியபடி கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.
கல்லூரி மாணவர்களிடையே மோதல்
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம், எளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள கிராமப்புற மாணவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இதனால் காலையில் ரெயிலில் கூட்டம் அலைமோதும். மாலை கல்லூரி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நிலையில் ரெயிலில் செல்லும் மாணவர்களிடம் யார் பெரியவர்? என்ற மோதல் ஏற்படுகிறது.
பட்டாக்கத்தியை உரசியபடி
ஒரு சில மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் ரெயிலில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் மின்சாரரெயிலில் வந்த மாணவர்கள் அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலைய நடைமேடைகளில் பட்டாக்கத்தியை உரசியபடி பாடல் பாடியபடி வந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இது ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரெயிலில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.