கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x

நித்திரவிளை அருகே பங்குத்தந்தைகள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே பங்குத்தந்தைகள் மீதான வழக்கை வாபஸ் பெறக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முள்வேலி அமைப்பு

நித்திரவிளை அருகே தூத்தூர் புனித யூதா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பின்பக்கம் 13 ஏக்கர் நிலம் உள்ளது. அதை தனிநபர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த இடத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் முள் வேலி அமைத்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் 8 பங்குதந்தைகள் தலைமையில் 8 ஊர் மக்கள் முள் வேலி அமைத்து வைத்திருந்த இடத்திற்கு சென்று முள் வேலிகளை கீழே சாய்த்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதோடு இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் முள் வேலிகளை அகற்றியதாக கூறி 8 ஊர் பங்கு தந்தைகள் மற்றும் ஊர்மக்கள் 50 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். மீனவ மக்கள் மற்றும் பங்கு தந்தைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரியின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து இருந்தனர். ஒருசிலர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து கல்லூரி வளாகத்திலும் வேலி அகற்றப்பட்ட பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story