கல்லூரி மாணவ-மாணவிகள் குத்தாட்டம்
கோவை அருகே வழியில் பஸ்சை நிறுத்தி கல்லூரி மாணவ-மாணவிகள் குத்தாட்டம் போட்டது பரபரப்பாக மாறியது.
கனவுகளை சுமந்து செல்லும்...கல்லூரி பருவத்தில்....அவர்கள் பயணிக்கும் பஸ்களும் சுகமான அனுபவத்தை சுமந்தே செல்கின்றன...
குளு...குளு பஸ்சில் பயணிப்பது போல்...கல்லூரி பறவைகளாக அவர்கள் பயணிக்கும் பஸ்களும் கண்களுக்கு குளிர்ச்சியாக கலகலப்பாகத்தான் மாறிவிடும்.
ஆண்பால்...பெண்பால் என்றில்லாமல்...அவர்கள் எல்லோரும் நட்பால்...இணைந்து பயணிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவிருக்காது...பஸ் டிரைவரும்...கண்டக்டரும் இளமையாக இருந்தால் அந்த பஸ்சில் உள்ள ஸ்பீக்கரில் போடப்படும் பாடல்களும் ஒருவித போதையை ஏற்படுத்தி விடும். இதனால் பயண களைப்பு என்பது போயே...போச்சு என்பதாகிவிடும்.
அந்த வகையில் ஒரு தனியார் பஸ் தினசரி திருப்பூர்-கோவைக்கு இயக்கப்படுகிறது. அந்த பஸ்சில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து செல்வது வழக்கம். கல்லூரி பஸ் வருவது போல்...அந்த பஸ் தினசரி கலகலப்பாக திருப்பூரில் இருந்து கோவைக்கு வரும். வரும் வழியில் பல்வேறு ஊர்களில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் உற்சாகமாக அந்த பஸ்சில் பயணித்து வருகின்றனர்.
நேற்று அந்த பஸ்சுக்கு வழித்தட தினமாம். இதனால் கல்லூரி மாணவர்களுக்கு சொல்லவா வேண்டும்... வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த பஸ்....கல்லூரி மாணவர்களின் கனவுரதமாக வந்து கொண்டிருந்தது.
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே காலை 8 மணிக்கு வந்ததுதான் தாமதம்.... மாணவர்கள் உற்சாகம் அடைந்து விட்டனர். இதில் பயணித்த கல்லூரி மாணவ- மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பஸ் நிறுத்தப்பட்டது.
அதில் இருந்து...திபு...திபுவென இறங்கிய மாணவ-மாணவிகள் அந்த பஸ்சின் முன்பு திரண்டனர்.
பட்டாசு வெடித்தும், வண்ண பொடிகளை பறக்க செய்தும்,மத்தளங்கள் முழங்க படு குஷியுடன் அவர்களுக்கே உரித்தான பாணியில் களம் இங்கி கலக்கினர். சில மாணவ- மாணவிகள் ஆர்வம் மிகுதியால்...சாலை என்றும் பார்க்காமல்... குத்தாட்டமும் போட்டது தான்....கிளைமாக்ஸ். அதற்கேற்ப அந்த பஸ்சில் பாடல்களும் ஒலித்தன.
மாணவர்களின் கொண்டாட்டம் ஒருபுறம் இருந்தாலும்...பஸ்சுக்குள் பணி நிமித்தமாக அவசரமாக செல்ல வேண்டும் என்று ஏறிவந்த பயணிகள் பாடுதான் திண்டாட்டமாக இருந்தது.
மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதனை வேடிக்கை பார்த்தாலும்...படிக்கிற வயதில் இதுபோன்ற கேளிக்கைகள் தேவையா என்பதையும் வெளியே சொல்லாமல் மனதுக்குள் சொல்லிக்கொண்டனர். இருந்தாலும் அந்த பகுதி பரபரப்பாக மாறியது.
இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது:- கல்லூரி பருவம் என்பது கட்டுப்படுத்த முடியாததுதான்...கலகலப்புடன் செல்லக்கூடியது தான்.
ஆனால் குறிப்பிட்டநேரத்தில் பயணிகளுடன் செல்ல வேண்டிய பஸ்சை பாதி வழியில் நிறுத்தி...பஸ்டே என்று கொண்டாடுவது சரிதானா என்பதை படிக்கும் மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
அவர்களுக்கான உற்சாகம் கல்லூரி தினத்தில் இருக்கட்டுமே. இதுபோன்ற கல்லூரிக்கு செல்லும்போது எதற்கு? என்பதை சிந்திக்க வேண்டும். இதற்கு பஸ் டிரைவர், கண்டக்டரும் ஒத்துழைப்பது கவலை அளிக்க கூடியது.
கல்லூரி மாணவிகளை இதுபோன்ற இடத்தில் பார்க்கும் பெற்றோர்கள் மனது என்ன பாடுபடும் என்பதை அவர்கள் உணராமல் உள்ளனர். ஆகவே தனியார் பஸ்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.