அரசு பஸ்சை வழிமறித்த கல்லூரி மாணவர்களால் பரபரப்பு
கூடலூரில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை கல்லூரி மாணவர்கள் வழிமறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூரில் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை கல்லூரி மாணவர்கள் வழிமறித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பஸ்
கூடலூர் பகுதியில் முக்கிய இடங்களில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் பெரும்பாலான கிராம மாணவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வருகின்றனர். அதன்பின்னர் அரசு பஸ்சில் பள்ளி, கல்லூரிக்கு சென்று படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கூடலூர் கோழிப்பாலம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக கல்லூரி முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றனர். இந்த சமயத்தில் கூடலூரில் இருந்து பயணிகளுடன் பந்தலூருக்கு அரசு பஸ் வந்தது. பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போதுமான இடவசதி இல்லை. இதனால் மாணவர்கள் கையை காட்டி நிறுத்த முயன்றனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், சக மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களில் பஸ்சை பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் இரும்பு பாலம் பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்தனர். இதனால் நடுவழியில் பஸ் நிறுத்தப்பட்டது.
பஸ்சை வழிமறித்த மாணவர்கள்
தொடர்ந்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நிற்பதற்கு இடமில்லாமல் உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி பஸ்சை நிறுத்தவில்லை என டிரைவர், கண்டக்டர் விளக்கம் அளித்தனர். இதை மாணவர்கள் ஏற்கவில்லை. இதனிடையே தகவல் அறிந்த கூடலூர் போலீசார் விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனிடையே அந்த வழியாக மற்றொரு பஸ் கூடலூரில் இருந்து பந்தலூர் நோக்கி சென்றது. அதிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம் செய்தனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.