மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 3 பேர் படுகாயம்
Collision of motorcycles; 3 people were seriously injured
மணல்மேடு:
மணல்மேடு அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு பட்டவெளி தெருவை சேர்ந்த சின்னதுரை மகன் மதியழகன் (வயது28). இவருடைய உறவினர் அகோரம் (40). இருவரும் கொத்தனார். சம்பவத்தன்று மதியழகன், அகோரம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வைத்தீஸ்வரன் கோவில் வழியாக மணல்மேடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மதியழகன், மோட்டார் சைக்கிளை ஓட்டினார். அகோரம் பின்னால் அமர்ந்து சென்றார். மன்னிப்பள்ளம் என்ற இடத்தில் அதே ஊரை சேர்ந்த நாகராஜ் (59) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சேத்தூர் சாலையில் இருந்து மணல்மேடு சாலையில் திரும்பியபோது, மதியழகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
3 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மதியழகன், அகோரம், நாகராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.