காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்


காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 29 May 2023 6:45 PM GMT (Updated: 29 May 2023 6:45 PM GMT)

மின்மாற்றி பழுதடைந்ததால குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டர் மகாபாரதியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மயிலாடுதுறை

மின்மாற்றி பழுதடைந்ததால குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு காய்ந்த நாற்றுகளுடன் வந்து கலெக்டர் மகாபாரதியிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மின்மாற்றி பழுது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாத்தூர் அருகே படுகை கிராமத்தில் உள்ள மின்மாற்றி பழுதடைந்ததால் அந்த பகுதியில் 600 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடிக்காக விடப்பட்ட நாற்றுகளும், நடவுசெய்த பயிர்களும் காய்ந்து வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், மின்மாற்றியை சீரமைப்பதில் காலதாமதம் படுத்தியதால் நாற்றுகள் காயத்தொடங்கியது.

காய்ந்த நாற்றுகளுடன் மனு கொடுக்க வந்த விவசாயிகள்

இதை தொடர்ந்து மாத்தூர் படுகை கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், காவிரிடெல்டா பாசனதாரர் முன்னேற்றசங்கத்தலைவர் கோபிகணேசன் தலைமையில் காய்ந்த நாற்றுகளுடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மனுஅளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- படுகை கிராமத்தில் டிசம்பர் மாதம் மின்னல் தாக்கி மின்மாற்றிகள் பழுதடைந்தது. அதனை மின்வாரியத்தினர் தற்காலிகமாக சீரமைத்தனர். தற்போது குறுவை சாகுபடி பணிகள் நடப்பதாலும், வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் மின்பயன்பாடு அதிகரித்த நிலையில் மின்மாற்றி மீண்டும் பழுதடைந்துவிட்டது. அதனை சரிசெய்யாமல் மின்வாரிய அலுவலர்கள் காலம்தாழ்த்தி வருவதால் நாற்றுகள் காய்ந்து கருகிவிட்டது.

சீரமைக்க வேண்டும்

படுகை கிராமத்திற்கு ஆக்கூர் மின்பிரிவில் இருந்து மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் 600 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் பாதிப்பு அடைந்து வருகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் வீடுகளிலும் மின்சாதன பொருட்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலனை கருத்தில்கொண்டு பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் அல்லது புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story