கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்


கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து மனு கொடுத்த விவசாயிகள்
x

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி நெல்லையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சுகன்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானவர்கள் மனு கொடுத்தனர்.

நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செல்லத்துரை செயலாளர் மாயகிருஷ்ணன் மற்றும் சுத்தமல்லி பகுதி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு கருகிய வாழைக்கன்றுகளுடன் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லை தாலுகாவுக்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் சுமார் 70 ஏக்கர் வாழை பயிர் கருகிய நிலையில் உள்ளது. இதை காப்பாற்றவும், சுத்தமல்லி, கருங்காடு, அத்திமேடு பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், கால்நடைகள் குடிப்பதற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கோடகன் கால்வாயில் உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இலவச வீட்டுமனை பட்டா

மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட வன்னிக்கோனேந்தல் பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி அந்த பகுதி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

அம்பை அருகே உள்ள ஊர்காடு பகுதி மக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் தலைமையில் பொதுமக்கள் கொடுத்த மனுவில், பேட்டை போலீஸ் நிலையம் எதிரே புதிதாக மீன் விற்பனை கூடம் நவீன முறையில் கட்டப்பட்டு உள்ளது. அதனை தகுதியுள்ள மீனவர்களுக்கு வழங்க வேண்டும். தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கி உள்ளதை ரத்து செய்ய வேண்டும். இந்த பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருகிற 7-ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின்போது மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் மீனவர் நலவாரிய அட்டையை ஒப்படைக்க உள்ளோம் என்று கூறியுள்ளனர்.

குண்டர் சட்டம்

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தேவேந்திர குல மக்கள் இயக்க நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சுரேந்திர பாண்டியன் ஆகியோர் தலைமையில் வந்து கொடுத்த மனுவில், கொக்கிரகுளம் ஆட்டோ நிறுத்தம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம், தாழையூத்து மற்றும் வல்லநாடு பகுதியை சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கற்களை வீசியும், கடைகளின் மீது அரிவாளால் தாக்குதலும் நடத்தினர். கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை இழிவுப்படுத்தும் வகையிலும், சமுதாய தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையிலும் அவர்கள் செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து நபர்களையும் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நெல்லை அபிஷேகப்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் விவசாயம் செய்யும் விளைநிலத்தை கோவில் நிலம் என்று கூறி அதை கையகப்படுத்தும் போக்கை நிறுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் தேவேந்திரன் தலைமையில் அந்த பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.

மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துவிட்டு சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை செய்ய வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இளையபெருமாள் தலைமையில் மனு கொடுத்தனர்.


Next Story