வரும் 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது; மும்பையில் 'இந்தியா' கூட்டணி ஆலோசனை கூட்டம்
மும்பையில் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் வருகிற 31 மற்றும் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைந்துள்ளன. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது.
2-வது ஆலோசனை கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கடந்த மாதம் 18- ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும் அந்த கூட்டத்தில் அடுத்த ஆலோசனை கூட்டம் மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மும்பையின் பவாய் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற 2 ஆலோசனை கூட்டங்களிலும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தனது கருத்துகளை வெளிப்படுத்தி ஆலோசனைகளை வழங்கி இருந்தார். இந்த நிலையில் மும்பையில் நடைபெற உள்ள கூட்டத்திலும் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வருகிற 31-ந்தேதி அன்று காலை 9.40 மணிக்கு விமானம் மூலம் மும்பை புறப்பட்டு செல்கிறார். செப்டம்பர் 1-ந்தேதி இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார்.