ரூ.6,445 கோடி திட்டப்பணிகள் தொடக்கம்: 'இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறது' - தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு


ரூ.6,445 கோடி திட்டப்பணிகள் தொடக்கம்: இந்தியாவின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறது - தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x

சென்னையில் நடந்த விழாவில் ரூ.6,445 கோடி திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை,

சென்னையில் ரூ.1,260 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையம் உள்பட தமிழ்நாட்டில் ரூ.6,445 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று மதியம் 2.45 மணியளவில், ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

பிரதமரை பழைய விமான நிலையத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை மந்திரி எல்.முருகன், கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின், அ.தி. மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மதியம் 2.54 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைப்பதற்காக வந்தார். வழியில் சாலையோரம் நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்களை பார்த்து, அவர் கையசைத்தபடி சென்றார். அவருடன் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் வந்தனர்.

ஒருங்கிணைந்த விமான நிலைய புதிய முனையத்தை ரிப்பன் வெட்டி பிரதமர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். பின்னர், உள்ளே சென்று அங்குள்ள சிறப்பு வசதிகளை பார்வையிட்டார். மீண்டும் பழைய விமான நிலையத்துக்கு காரில் வந்த பிரதமர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு வந்தார்.

அங்கிருந்து காரில் சென்டிரல் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டார். வழிநெடுக சாலையின் இருபுறமும் பொதுமக்களும், பா.ஜ.க. தொண்டர்களும் நின்று மலர்களை தூவி அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

பிரதமர் காரில் இருந்தபடியே கையசைத்தபடி சென்றார். ஆங்காங்கே பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கோலாட்டம் என தமிழக பாரம்பரிய கலைகளை கலைஞர்கள் வெளிப்படுத்தி வரவேற்றனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10-வது நடைமேடையில் தயாராக நின்ற சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, ரெயிலில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.

அதன்பின்னர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு வந்தார். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கே நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார்.

பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி, ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு சென்றார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை பழைய விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து காரில் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திரமோடி, அங்கு நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

தமிழகத்துக்கு வருவது என்பது எப்போதுமே அருமையான அனுபவம். இது வரலாறு, பாரம்பரியத்தின் இருப்பிடம். இது மொழி-இலக்கியத்தின் விளைநிலம். தேசபக்தி, தேசிய உணர்வின் மையமும் கூட. பல சுதந்திர போராட்ட தியாகிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான்.

ஒரு கொண்டாட்ட வேளையில் நான் வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் தமிழ் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. புதிய ஆற்றல், புதிய நம்பிக்கைகள், புதிய எதிர்பார்ப்புகள், புதிய தொடக்கம் ஆகியவற்றின் நேரம் இது. சில புதிய தலைமுறை கட்டமைப்பு திட்டங்கள் மக்களுக்கு இன்றில் இருந்து சேவையாற்ற இருக்கின்றன. வேறு சில திட்டங்களுக்கான பணிகளும் தொடங்க இருக்கின்றன. சாலை வழிகள், ரெயில் பாதைகள், விமான மார்க்கங்கள் உள்ளடக்கிய இந்த திட்டங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உற்சாகத்தை கூட்டும்.

இந்தாண்டு மத்திய வரவு-செலவு திட்ட அறிக்கையில், கட்டமைப்பில் முதலீட்டுக்காக சாதனை தொகையாக ரூ.10 லட்சம் கோடியை ஒதுக்கியிருக்கிறோம். 2014-ம் ஆண்டு ஒதுக்கீட்டை விட இது 5 மடங்கு அதிகமானது. ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்ட தொகையும், இதுவரை இல்லாத சாதனை தொகையாகும்.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2 மடங்கு அதிகமாகி இருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் 600 கி.மீ. ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டன. இன்று ஒவ்வொரு ஆண்டும் அது 4 ஆயிரம் கி.மீ. ரெயில் பாதை என்ற அளவை எட்டி வருகிறது. 2014-ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட விமான நிலையங்கள் எண்ணிக்கை 74. அதற்கு பிறகு இதனை 2 மடங்கு அதிகமாக்கி, கிட்டத்தட்ட 150 ஆக ஆக்கியிருக்கிறோம்.

2014-ம் ஆண்டில் இந்தியாவில் 380 மருத்துவக்கல்லூரிகள் இருந்தன. இன்று நம்மிடம் சுமார் 660 மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளில் நமது நாட்டில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளின் எண்ணிக்கை 3 மடங்காகி இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகத்திலேயே முதலிடத்தில் இருக்கிறோம்.

உலகின் விலை மலிவான மொபைல் டேட்டா நம்மிடம்தான் இருக்கிறது. 6 லட்சம் கி.மீ.க்கும் மேற்பட்ட கண்ணாடி இழை நார்கள் போடப்பட்டு, கிட்டத்தட்ட 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இது இணைக்கிறது. இதன்மூலம் நகர்ப்புறத்தை காட்டிலும், ஊரக இணைய பயன்பாட்டாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இத்தனை சாதனைகளை எது சாத்தியம் ஆக்கியது? பணி கலாசாரம் மற்றும் தொலைநோக்கு பார்வைதான்.

கட்டமைப்புக்கான எங்கள் தொலைநோக்கு பார்வை என்பது, முந்தைய காலத்தை விட வித்தியாசமானது. கட்டமைப்பு என்பதை வெறும் கான்கிரீட் கலவை, செங்கல், சிமெண்ட் என்பதாக மட்டுமே பார்க்கவில்லை. கட்டமைப்பை ஒரு மனித முகத்துடன், மனிதத்துடன் அணுகுகிறோம். மக்களை சாத்தியங்களோடும், கனவுகளை நிஜங்களோடும் இணைக்கிறோம். சாலை வழி திட்டங்களில் ஒன்று விருதுநகர்-தென்காசி பருத்தி விவசாயிகளை, மற்ற சந்தைகளோடு இணைக்கிறது.

சென்னை - கோவை வந்தே பாரத் ரெயில், சிறுதொழிலை வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது. சென்னை விமான நிலைய புதிய முனையம், உலகத்தை தமிழகத்திடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இது இங்கிருக்கும் இளைஞர்களுக்கு வருவாய் சந்தர்ப்பங்களை அளிப்பதுடன், முதலீடுகளையும் ஈர்க்கிறது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது எங்களுக்கு பெரிய முதன்மையான விஷயம்.

ரெயில்வே துறை கட்டமைப்புக்காக இதுவரை காணாத ஒதுக்கீடாக, தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி, இந்தாண்டு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

2009-14-ம் ஆண்டு காலத்தில், ஓராண்டு சராசரி ஒதுக்கீடு தொகை ரூ.900 கோடி. 2004-14-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் சேர்க்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் சுமார் 800 கி.மீ. 2014-23-ம் ஆண்டு காலகட்டத்தில் கூட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் நீளம் என்பது கிட்டத்தட்ட 2 ஆயிரம் கி.மீ. ஆகும்.

2014-15-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக புரியப்பட்ட முதலீடு ரூ.1,200 கோடி ஆகும். 2022-23-ம் ஆண்டில் இது 6 மடங்காக அதிகரித்து, ரூ.8 ஆயிரத்து 200 ஆக மாறி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பல முக்கிய திட்டங்களை தமிழகம் கண்டிருக்கிறது.

பாதுகாப்பு தொழில்துறை இடைவெளி, இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், இங்கே வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது. பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா அறிவிப்பு, தமிழகத்தின் ஜவுளித்துறைக்கு சாதகமாக இருக்கும். கடந்தாண்டு பெங்களூரு-சென்னை விரைவு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டினோம்.

சென்னைக்கு அருகே பல்முனை ஏற்பாட்டியல் பூங்கா கட்டுமானம் நடைபெற்று வருகிறது. மாமல்லபுரம்-கன்னியாகுமரி இடையேயான கிழக்கு கடற்கரை சாலையானது, பாரத்மாலா திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் பல பல திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்றும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் 3 முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவையில் தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்களால், நேரடி ஆதாயத்தை இந்த நகரங்கள் அடைகின்றன. புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம், சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இது அதிகரிக்கும் பயணிகளின் தேவைக்கேற்ப ஈடுகொடுக்கும் வகையில் இருக்கிறது. இந்த கட்டிடம் தமிழ் கலாசார அழகை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஒரு வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு கிடைத்திருக்கிறது. இது சென்னையை கோவையுடன் இணைக்கும் முதல் வந்தே பாரத் ரெயில். இது சென்னைக்கு வந்தபோது, தமிழக இளைஞர்கள் உற்சாகம் அடைந்தார்கள். இந்த ரெயில் குறித்து சமூக வலைதளத்தில் வைரலாக தகவல் பரவியது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதில் இருக்கும் பெருமிதம், வ.உ.சி. பிறந்த பூமியில் இயல்பான விஷயம் தானே.

ஜவுளித்துறை, சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகள், தொழிற்சாலைகள் என எதுவாக இருந்தாலும், கோவை மாநகரம் தொழில்களின் சக்தி பீடமாக இருந்து வருகிறது. நவீன இணைப்பு என்பது மக்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். இந்த வந்தே பாரத் ரெயில், ஜவுளி மற்றும் தொழில் மையங்களான சேலம், ஈரோடு, திருப்பூருக்கு ஆதாயங்களை கொண்டு சேர்க்கிறது.

தமிழகத்தின் கலாசார தலைநகராக இருப்பது மதுரை. இது உலகின் மிக பண்டைய நகராகும். இன்றைய திட்டங்கள், இந்த பண்டைய நகரின் நவீன கட்டமைப்புக்கு ஒரு உந்துதலாக இருக்கும். இவை சுலபமாக வாழும் தன்மை, சுலபமான பயணம் ஆகியவற்றை மதுரைக்கு அளிக்கும். தென்மேற்கில் இருக்கும் பல மாவட்டங்கள், தமிழகத்தின் கரையோர பகுதிகளும் இன்றைய திட்டங்களால் பலனடைகின்றன.

தமிழகம் இன்று இந்தியாவின் வளர்ச்சி என்ஜின்களில் ஒன்று. இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்கள், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஒரு பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்பதின் உறுதிப்பாடு ஆகும்.

தலைசிறந்த தரம் வாய்ந்த கட்டமைப்பு, இங்கே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்போது, வருவாய் அதிகரிக்கிறது. தமிழகமும் வளருகிறது. தமிழகம் வளரும்போது, இந்தியாவே வளருகிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

விழா முடிந்ததும், காரில் புறப்பட்டு, மீண்டும் சென்னை பழைய விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து தனி விமானத்தில் மைசூரு புறப்பட்டு சென்றார்.

அங்கு இரவு தங்கிய அவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து பார்வையிடுகிறார். மேலும், சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார்.


Next Story