சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை
சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
கடலூர்,
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். தமிழக அரசு கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்த அனுமதி அளித்தது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் பணி பிரிவு ,கோவில் நிர்வாகம் ,சிற்றம்பலம் மீது ஏற அனுமதி மறுத்தது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறை விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. விசாரணை குழு நேரடியாக சென்று கோவிலில் ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 7,8-ந்தேதிகளில் சிறப்பு அதிகாரி சுகுமாறன் தலைமையில் இணை, துணை ஆணையர்கள், தணிக்கை அதிகாரி கொண்ட குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து விசாரணை மேற்கொள்ள இந்து சமய அறநிலைய அறக்கட்டளைகள் சட்டத்தின் சட்ட பிரிவு 23 மற்றும் 33-ன்படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம், கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் நாளை முதல் ஜீன் 21ம் தேதி மாலை 3 மணி வரை தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் .மேலும், அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் கருத்துகளை அனுப்பலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.