ரூ.40¾ கோடி திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு
கோவை மாநகராட்சியில் ரூ.40¾ கோடி திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.
கோவை, ஆக.8-
கோவை மாநகராட்சி ஆணையாளர் நேற்று மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது நீலிக்கோணாம்பாளையத்தில் உள்ள பாலத்தை சீரமைத்து கால்வாயை தூர்வார உத்தரவிட்டார்.
பின்னர் தடாகம் சாலை ஜி.சி.டி. கல்லூரி முதல் இடையர்பாளையம் வரையிலும், இடையர்பாளையம் முதல் கவுண்டம்பாளையம்வரையிலும் நடைபெற்று வரும் தார்சாலை பணிகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பழனியம்மாள் லே-அவுட்டில் நடைபெற்ற சாலையின் தரத்தை, அளவிட்டு ஆய்வு செய்து, மேற்கு மண்டலம் ஜீவா நகரில் ரூ.5.20 கோடியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.
இதையடுத்து 45-வது வார்டு சாய்பாபாகாலனியில் ரூ.31.07 கோடியில் புனரமைக்கும் பணி நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். மார்க்கெட் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார். பின்னர் பி.என்.புதூர் விவேகானந்தர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் என மொத்தம் ரூ.40 கோடியே 82 லட்சத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.