போதைப்பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கிட உறுதி ஏற்க வேண்டும்


போதைப்பொருள் இல்லாத மாவட்டத்தை உருவாக்கிட உறுதி ஏற்க வேண்டும்
x

போதைப் பொருட்கள் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தி வலியுறுத்தியுள்ளார்.

தர்மபுரி

போதைப் பொருட்கள் இல்லாத தர்மபுரி மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று கலெக்டர் சாந்தி வலியுறுத்தியுள்ளார்.

கருத்தரங்கம்

போதைப்பொருள் தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், ஜி.கே. மணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கருத்தரங்கில் கலெக்டர் பேசியதாவது:-

மாணவச் செல்வங்கள் எதிர்கொண்டு இருக்கக்கூடிய ஆபத்துக்கள் கண்ணுக்கு தெரியக்கூடிய ஆபத்துக்கள் என்று பார்த்தால் முதலாவதாக போதைப் பழக்கம். தெரிந்தோ, தெரியாமலோ இந்த பழக்கத்திற்கு ஆளாயிடுகின்ற சிலரின் வாழ்க்கை பாலாகி விடுகிறது. இது போன்ற போதைப்பழக்கங்கள் வளர விடக்கூடாது என்பதற்காகத்தான் மாணவர்களிடையே மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் யாரேனும் எதிர்பாராத விதமாக போதைப் பழக்கத்திற்கு ஆளாக நேர்ந்தால் அது குறித்த விவரங்களை உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

உறுதி ஏற்க வேண்டும்

மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது கல்வி ஒன்று மட்டுமே என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் செல்போன்களை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை படிப்பதை மட்டுமே முக்கிய குறிப்பாக கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் உயர்ந்த இடத்தையும், சிறந்த வளர்ச்சியையும் எளிதில் அடைய முடியும். போதை பழக்கங்கள் போன்ற ஆபத்துக்கள் உங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.தர்மபுரி மாவட்டத்தை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர்பேசினார்.

முன்னதாக தர்மபுரி அதியமான் அரசு பள்ளியில் இருந்து போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சப் கலெக்டர் சித்ரா விஜயன், முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், கலால் உதவி ஆணையர் தணிகாசலம், தாசில்தார் ராஜராஜன், துணைப் போலீஸ் சூப்பிரண்டுகள் வினோத், ராஜா சோமசுந்தரம், ரோட்டரி சங்க மாவட்ட பயிற்சியாளர் நடேசன், ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல் மனநல மருத்துவர் ஞானமணிகண்டன் மற்றும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story