ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும் - ராமதாஸ்


ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும் - ராமதாஸ்
x

ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின எம்.பி.க்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐ.ஐ.டி.) பேராசிரியர்கள் பணி நியமனத்தில் ஒட்டுமொத்தமாகவே 14 சதவீதத்துக்கும் குறைவாகவே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் சமூகநீதிக்கான குரல்கள் நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஐ.ஐ.டி. வளாகங்களில் மட்டும் அந்த குரலே நசுக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

2020-ம் ஆண்டு நிலவரப்படி சென்னை ஐ.ஐ.டி. ஆசிரியர்களில் ஓ.பி.சி. பங்கு 9.64 சதவீதம், பட்டியலினத்தவர் பங்கு 2.33 சதவீதம், பழங்குடியினரின் பங்கு 0.43 சதவீதமாகவும் இருந்தது. இப்போது அந்த அளவு சற்று அதிகமாகி உள்ளது. இதற்கான காரணம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்தது அல்ல. மாறாக, உயர் வகுப்பைச் சேர்ந்த பேராசிரியர்கள் சற்று அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெற்றது தான்.

ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய அங்கு நடைபெறும் பணி நியமனங்களை கண்காணிக்க பிற்படுத்தப்பட்ட, பட்டியலின - பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story