கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2023 8:45 PM GMT (Updated: 6 Oct 2023 8:45 PM GMT)

திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

திருமங்கலம்

சுங்கச்சாவடி

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், அனைத்து கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உள்ளூர் மக்களுக்கு இடையூறாகவும் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் காளிதாஸ் தலைமையில் கட்சியினர் சுங்கச்சாவடி அருகே திரண்டு வந்து தரையில் அமர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க முயன்றனர். அப்போது திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திரண்டு வந்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.

உண்ணாவிரதம்

இதனால் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மாநில குழு உறுப்பினர் காளிதாஸ் கூறும்போது, கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் மதுரை புறநகர் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் ரூ.7.5 கோடி ஊழல் சி.ஏ.ஜி. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. திருமங்கலத்தில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற வேண்டும் என்பது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இதுவும் ஒன்று. எனவே இதுதொடர்பாக முதல்-அமைச்சர் முன் முயற்சி எடுக்க வேண்டும். மத்திய அரசு தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டிய ஊழலுக்கு காரணமான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். இந்த சுங்கச்சாவடி சட்ட விரோதமாக அமைக்கப்பட்டது. பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தியும் அதற்கான முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை என்றார்.. இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச் செயலாளர் சந்தானம் உள்பட ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story