மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது


மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
x

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

ஜீயபுரம்:

திருச்சியை அடுத்துள்ள சோமரசம்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். அயிலை சிவ சூரியன், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினார்கள். அப்போது பெண்ணொருவர் காய்கறிகளை மாலையாக அணிந்திருக்க, சிலிண்டர்களுக்கு மாலை போட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிடுவதற்காக சென்றனர்.

தபால் நிலையத்தின் அருகில் சென்றபோது அவர்களை ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் மற்றும் சோமரசம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கட்சியினர் சோமரசம்பேட்டை-தோகைமலை செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதேபோல் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் ரெயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ரெயில் மறியலில் ஈடுபட ஊர்வலமாக வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

துறையூர் பஸ் நிலையம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கக்கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். திடீரென மறியலில் ஈடுபட முயன்ற 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் துறையூர் பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story