சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது
சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தக்கூடாது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ரெயில், விமானம் ஆகியவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்கக்கூடாது. அரிசி மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், மோகன்குமார், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை கைது செய்து, வேனில் அழைத்து சென்றனர்.