மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மத்திய 'மோடி அரசே வெளியேறு' என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொடர் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னை பாரிமுனையில் உள்ள தபால் நிலையம் அருகே மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் போது, முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி அரசு இனியும் தொடர்ந்தால் நாட்டில் ஜனநாயகம் சீரழிக்கப்படும். இந்தியா என்ற மகத்தான கூட்டணி உருவான பிறகு மோடி, அமித்ஷா போன்றவர்கள் கதிகலங்கி உள்ளனர். இந்தியா என்கிற இந்த பெயரை எந்த அமைப்பிலும் விவாதிக்காமல், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கேட்காமல் தன்னிச்சையாக பாரத் என்று எதேச்சதிகாரத்தில் மோடி அறிவித்து இருக்கிறார்.

வீட்டுக்கு அனுப்பப்படுவார்

அது மட்டுமல்லாமல் ஜி-20 மாநாடு விருந்து நிகழ்ச்சிக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை. இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் ஆகும். ஜனநாயகம், மதசார்பின்மை கொள்கை மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இணையும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மோடி வீட்டுக்கு அனுப்பப்படுவார்.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசியது மிகவும் சரியானது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் கருத்தைதான் அவர் கூறினாரே தவிர புதிதாக ஒன்றும் கூறவில்லை. சனாதனம் ஒருபோதும் வெற்றி பெறாது. சமத்துவ கொள்கைதான் வெற்றி பெறும். அதை நோக்கிதான் எங்கள் பயணம் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சாலை மறியல்

போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மூத்த நிர்வாகி ஏழுமலை, வக்கீல் பிரிவு மாநில செயலாளர் குமார், கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வேம்புலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி திடீரென ராஜாஜி சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ¼ மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தனர்.

திண்டுக்கல்

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. திண்டுக்கல், வேடசந்தூர், தேனியில் நடந்த மறியலில் ஈடுபட்ட 199 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்டதாக 636 பேர் கைதாகினர். வேலூரில் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள தபால் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 325 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூரில் 300 பேரும், நாகையில் 200 பேரும், மயிலாடுதுறையில் 43 பேரும் கைது செய்யப்பட்டனர். விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 49 பேரும், கடலூர், ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடத்தில் 160 பேரும் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையில் 50-க்கும் மேற்பட்டோரும், தூத்துக்குடியில் 100 பேரும், தென்காசியில் 105 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதாகினர்.

தள்ளுமுள்ளு

திருச்சியில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 137 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரும், புதுக்கோட்டையில் 50 பேரும், அரியலூரில் 40 பேரும் கைதாகினர். நாகர்கோவிலில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில்3 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் 722 பேர் கைது செய்யப்பட்டனர்.

கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டம்

சென்னை பாரிமுனையில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்டவர்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போன்று, ரூ.7.5 லட்சம் கோடி முறைகேட்டை குறிக்கும் வகையில் சிறுவர்கள் விளையாட பயன்படுத்தும் 2 ஆயிரம் ரூபாய் மாதிரி நோட்டால் ஆன கூண்டு ஒன்றை சுமந்தபடி ஒருவர் மோடியின் முகமூடியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

ராக்கெட் வேகத்தில் விலை உயர்வதை குறிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் என்று எழுதப்பட்ட மாதிரி ராக்கெட் ஒன்றையும் கொண்டு வந்திருந்தனர்.

மேலும், ஏழைகளை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக சித்தரிக்கும் வகையில், மோடியின் முகமூடி அணிந்தபடி பாமரன் ஒருவரை காலால் மிதிப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், குரங்கு வேடம் அணிந்த ஒருவர் செங்கோலுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.


Next Story