இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Sep 2023 6:45 PM GMT (Updated: 12 Sep 2023 6:46 PM GMT)

மத்திய அரசை கண்டித்து விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

அம்பானி, அதானியை கோபுரத்தில் ஏற்றி வைத்த மோடி அரசை கண்டித்தும், 10 ஆண்டுக்குள் விவசாயிகள், மாணவர்கள், ஏழைகள் முதல் சிறு, குறு, நடுத்தர தொழிலாளர்கள் வரை ஏராளமானோர் தற்கொலை செய்ததற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சவுரிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர்கள் கலியமூர்த்தி, முருகன், பொருளாளர் இன்பஒளி ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சகாபுதீன், ராஜேந்திரன், ராமச்சந்திரன், நாராயணன், ஜெயச்சந்திரன், ஜெயமலர் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

49 பேர் கைது

உடனே விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 49 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story