வௌி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் ஆர்ப்பாட்டம்


வௌி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் ஆர்ப்பாட்டம்
x

வெளி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இல்லாததால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பஸ்களை சிறை பிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை விடுமுறை என்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் குவிந்து இருந்தனர்.

ஆனால் வெளி மாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. வந்து சென்ற பஸ்களும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் பஸ்கள் கிடைக்காமல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவு வரை பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் பஸ்கள் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையம் வந்த அரசு பஸ்களை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்தனர்.

பின்னர் வெளி மாவட்டங்களுக்கு சீரான இடைவெளியில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் நள்ளிரவில் திரண்டு இருந்த பயணிகள், பஸ்களில் முண்டியடித்து கொண்டு ஏறினர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இருக்கைகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என நின்று கொண்டே பயணம் செய்தனர்.

இந்த சம்பவம் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story