கணக்கீடு செய்துள்ள பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்


கணக்கீடு செய்துள்ள பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
x

கணக்கீடு செய்துள்ள பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரியலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர்

தங்க.தர்மராஜன் கூறுகையில், கடந்த மாதம் கொள்ளிடம் ஆற்றில் வரலாறு காணாத அளவில் மாதக்கணக்கில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விட்டதால் குருவாடி, தூத்தூர், வைப்பூர், முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், புரந்தான், அரங்கோட்டை, அனைகுடி போன்ற கிராமங்களில் சூரியகாந்தி, பருத்தி, நெல், சோளம் போன்ற பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. அதனை வேளாண் அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளார்கள், அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன் அனைத்து வரத்து பாசன வடிகால், வாய்க்கால் அனைத்தையும் தூர்வார வேண்டும் என்றார்.

இழப்பீடு வழங்க வேண்டும்

வெண்மான் கொண்டான் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில், ஆண்டிப்பட்டா காடு, சின்னபட்டாகாடு, ஏழேரி, இடையத்தான் குடி, ஆலந்துறையார் கட்டளை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 800 ஏக்கருக்கு மேல் பருத்தி பயிர் விதைத்து ஒரு மாதத்திற்குள் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்பு சுக்கிரன் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி நீர் சேமிக்க வேண்டும் என்றார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க அனுமதிக்க கூடாது வெள்ளாற்றில் மணல் அள்ள அனுமதி அளித்ததை ரத்து செய்ய வேண்டும். மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. இதனால் விவசாயம் அழியும் நிலை ஏற்படும்.

மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தவாறு மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும் என்றார். இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜன் கூறுகையில், வெண்மான் கொண்டான் கிராமம் ஆட்டுக்காரன் தெருவில் அய்யனார் கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் ஆக்கிரமப்புகளை அகற்றக்கோரி 03.01.2022 மற்றும் 05.09.2022 அன்று மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவின் பேரில் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் பேசுகையில், மின்சார வாரியம் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு ஏற்கனவே கட்டி வந்த கட்டணம், சேவை கட்டணம், வளர்ச்சி கட்டணம் 2 மடங்கு உயர்த்தியதை கைவிட வேண்டும் என்றார். தொடர்ந்து விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.


Next Story