பொய் வழக்கில் சிறைவாசம் அனுபவித்த 4 பேருக்கு இழப்பீடு
இரட்டைக்கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட 4 பேர் சிறைவாசம் அனுபவித்ததற்காக உரிய இழப்பீட்டை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இரட்டைக்கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட 4 பேர் சிறைவாசம் அனுபவித்ததற்காக உரிய இழப்பீட்டை 8 வாரத்தில் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பொய் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், வரதராஜன், சுடலைமுத்து, யேசுதாசன். இவர்கள் 4 பேரும் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்களுக்கும், பக்கத்து வீட்டுகாரருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டில் சிவில் பிரச்சினை இருந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், போலீஸ் நிலையத்தில் வைத்து பஞ்சாயத்து பேசினார்.
இதற்கு நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அந்த சமயம் நடந்த இரட்டைக்கொலை வழக்கில் எங்களுக்கு சம்பந்தம் உள்ளது எனக்கூறி, அந்த வழக்கில் 4 பேரையும் சேர்த்துவிட்டார்.
சிறைவாசம்
இதில் வரதராஜன், சுடலைமுத்து, யேசுதாசன் ஆகியோர் 92 நாட்களும், பரமசிவம் 53 நாளும் சிறையில் இருந்தோம். இதற்காக உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிட வேண்டும். இன்ஸ்பெக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, இன்ஸ்பெக்டர் செல்வம் இறந்துவிட்டார். இதனால் அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- மனுதாரர்கள் 4 பேரும் கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் இழப்பீடு பெற அவர்களுக்கு தகுதி உள்ளது. இன்ஸ்பெக்டர் இறந்ததால் எப்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் தற்போதைய கேள்வி.
4 பேருக்கும் இழப்பீடு
ஆனால் மனுதாரர்களுக்கு அரசு தான் இழப்பீடு வழங்க வேண்டும். வரதராஜன் சுடலைமுத்து மற்றும் யேசுதாசன் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.7,500 வீதம் தலா ரூ.6 லட்சத்து 90 ஆயிரமும், பரமசிவத்துக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 500-ஐயும் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகைக்கு 6 சதவீத வட்டியுடன் 8 வாரத்தில் வழங்க உள்துறை செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படியும் மனுதாரர்கள் இழப்பீடு பெற தகுதியானவர்கள்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.