கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா போட்டி
கொடுங்கியம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா போட்டி நடைபெற்றது.
கொடுங்கியம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா ரேக்ளா போட்டி நடைபெற்றது.
ரேக்ளா போட்டி
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலையை அடுத்த கொடுங்கியம் ஊராட்சி பகுதியில் உடுக்கம்பாளையம் மற்றும் எரிசனம்பட்டி தி.மு.க. கிளை சார்பில் 8-ம் ஆண்டு ரேக்ளா போட்டி நடத்தப்பட்டது. போட்டிக்கு உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தி.செழியன் தலைமை தாங்கினார். போட்டியை திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. இரா.ஜெயராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் பங்கேற்பதற்காக காங்கயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் கொடிங்கியம் பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. போட்டி 200 மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் பிரிவில் 343 வண்டிகளும், 300 மீட்டர் பிரிவில் 99 வண்டிகளும் கலந்துகொண்டது.
பரிசு
அதைத்தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படி மாட்டு வண்டிகள் அழைக்கப்பட்டது. இதையடுத்து வண்டிகளில் பூட்டப்பட்ட மாடுகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தது. போட்டியை பொதுமக்கள் பாதுகாப்பாக பார்த்து ரசிக்கும் வகையில் உடுமலை-ஆனைமலை சாலையின் இரண்டு புறங்களில் இரும்பு தடுப்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தது. அங்கு திரண்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விசில் அடித்தும் கைதட்டியும் மாட்டு வண்டி உரிமையாளர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
அதன்படி 200 மீட்டரில் முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், 2-ம் பரிசாக ¾ பவுன் தங்க நாணயமும், 3-ம் பரிசாக ½ பவுன் தங்க நாணயமும், 4-ம் பரிசாக ¼ பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. மேலும் ஆறுதல் பரிசாக 5-ம் பரிசு முதல் 10- ம் பரிசு வரை ஒரு கிராம் தங்க நாணயமும் 11-ம் பரிசு முதல் 30-ம் பரிசு வரை கோப்பைகளும், ஆறுதல் பரிசாக கோப்பைகள் வெள்ளி நாணயங்கள் வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இதேபோன்று 300 மீட்டருக்கும் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. 18 வினாடிகளுக்கும் குறைவாக வந்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கினார். இதில் உடுமலை ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராம்குமார், கிருஷ்ணவேணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாமணி மோகன், கிருஷ்ணவேணி சரவணப்பெருமாள், பாரதி கோவிந்தராஜ், அபர்ணா ராம்குமார், பாலதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டி நடைபெறுவதை யொட்டி உடுமலை -ஆனைமலை சாலையில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.