தேர்வு வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பரப்பியதாக புகார்


தேர்வு வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பரப்பியதாக புகார்
x

ஆர்.எஸ்.மங்கலம் அருகே பள்ளியில் தேர்வு வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பரப்பியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராமநாதபுரம்


ஆர்.எஸ்.மங்கலம் அருகே பள்ளியில் தேர்வு வினாத்தாளை வாட்ஸ்அப்பில் பரப்பியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அறிவியல் தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்டது ஏ.மணக்குடி கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான அறிவியல் பருவ தேர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்காக கல்வித்துறை அதிகாரிகள் வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் வழங்கியதாக கூறப் படுகிறது. இந்த சூழ்நிலையில் மேற்கண்ட அறிவியல் பாடத் தேர்வுக்கான வினாத்தாள் பள்ளியில் முன்னதாகவே நேற்று மாணவர்களுக்கு வழங்கியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

வைரல்

சமூக வலைத்தளங்களில் இந்த கேள்வித்தாள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- மேற்கண்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்று இருந்த சமயம் மற்றொரு ஆசிரியர் ஜெயக்குமார் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்துள்ளார். அறிவியல் தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக பீரோவில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் பொறுப்பு ஆசிரியர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாதிரி வினாத்தாள் ஒன்றை வழங்கி படிக்குமாறு கூறியுள்ளார். இதனை உள்நோக்கத்துடன் பழிவாங்க வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியில் அதே பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப்பில் அனுப்பியது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

விசாரணை

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வினாத்தாள் தேர்வுக்கான வினாத்தாள் அல்ல. இதுதொடர்பாக நான் மேற்கண்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி இது போன்ற தவறான புகைப்படத்தை பரப்பிய ஆசிரியரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன். புகைப்படத்தில் முக்கிய ஆதாரம் கிடைத்து உள்ளதால் அதனை உறுதிப்படுத்தி பணியிடை நீக்கம் செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பழிவாங்கும் நோக்கத்தில் தவறான கேள்வித்தாளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story