பெண் குழந்தையை விற்க முயன்றதாக மாமியார் மீது இளம்பெண் புகார்
பள்ளிபாளையம் அருகே 2 மாத பெண் குழந்தையை மாமியார் விற்க முயன்றதாக இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் குழந்தை
சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது22). இவரும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கீதா (22) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்பு இருவரும் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதா கர்ப்பமாக இருந்ததால், உதவிக்கு யாரும் இல்லாததால் தவித்து வந்தார். இதுகுறித்து மனோஜ்குமார் அவரது தாயார் கோமதியிடம் கூறவே அவர் இருவரையும் திருப்பூரில் இருந்து அழைத்து வந்து, பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தார்.
இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதாவிற்கு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
குழந்தைைய விற்க முயற்சி
இந்த நிலையில் சங்கீதா மற்றும் அவரது கணவர் மனோஜ்குமார் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே 4 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற மனோஜ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மனோஜ்குமாரின் தாயார் கோமதியிடம் சங்கீதா கேட்கவே, அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் கோமதி 2 மாத பெண் குழந்தையை புரோக்கர் மூலம் ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சங்கீதா நேற்று பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, தனது மாமியார் மீது, பணத்திற்கு ஆசைப்பட்டு தனது குழந்தையை விற்க முயல்வதாக புகார் அளிக்க சென்றார்.
ஆனால் போலீசார் இந்த வழக்கினை இங்கு விசாரணை செய்ய முடியாது எனக் கூறி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்பு 2 மாத குழந்தையுடன் சங்கீதா, சமூகநலத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், சங்கீதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காப்பகத்தில் தங்க வைப்பு
இதற்கிடையே அதிகாரிகளிடம் சங்கீதா தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சங்கீதா குறித்தும், குழந்தை அவருடையது தானா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது மாமியார் கோமதியிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக கூறப்படும் நிலையில் அங்குள்ள ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டு உள்ளனர். அதுவரை சங்கீதா மற்றும் 2 மாத குழந்தையை அரசு காப்பகத்தில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.