நிலத்தை அபகரிப்பு செய்ததாக பா.ஜனதா பிரமுகர் மீது புகார்: பெண் தீக்குளிக்க முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


நிலத்தை அபகரிப்பு செய்ததாக பா.ஜனதா பிரமுகர் மீது புகார்: பெண் தீக்குளிக்க முயற்சி-கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x

நிலத்தை பா.ஜனதா பிரமுகர் அபகரிப்பு செய்ததாக கூறி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்

தீக்குளிக்க முயற்சி

சேலம் அருகே சின்ன வீராணத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சின்னப் பொண்ணு (வயது 50). இவர், நேற்று மதியம் தனது இரண்டாவது மகன் லோகேஷ் (18) என்பவருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, நுழைவு வாயில் பகுதிக்கு வந்த சின்னப் பொண்ணு திடீரென தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதை பார்த்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அவரை தடுத்து உடலில் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நிலம் அபகரிப்பு

அதில், தனக்கு சொந்தமான 2¾ ஏக்கர் விவசாய நிலம் சின்ன வீராணத்தில் உள்ளது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். மேலும், 1¾ சென்ட் நிலத்தை பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் ஒருவர் அபகரித்து கொண்டார். அவர் மீது போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இதனால் அந்த நிலத்தை அவரிடம் இருந்து மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தேன். எனது நிலத்தை மீட்டுத்தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியில்லை என தீக்குளிக்க முயற்சி செய்ததாக போலீசாரிடம் சின்னப்பொண்ணு தெரிவித்தார்.

பா.ஜனதா பிரமுகர்

இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற சின்னப்பொண்ணு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகிய 2 பேரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜனதா பிரமுகர் நிலத்தை அபகரித்து கொண்டதாக கூறி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story