புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் நகரில் தற்காலிகமாக பயன்பாட்டில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் முழுவதும் தூசியும், புழுதியும் உயர பறந்து பயணிகள் மூச்சு திணறும் நிலை ஏற்படுகிறது. இதனால் இங்கு வரும் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. எனவே தரையை செப்பனிட்டு புழுதி எழாவண்ணம் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
தெருநாய்கள் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. சாலையில் நடந்து செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் சிலர் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், சாயல்குடி.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் புதிதாக போடப்பட்ட தார்சாலை பழைய சாலையை சமன் செய்யாமல் ஒரு பக்கம் மேடாகவும், ஒரு பக்கம் பள்ளமாகவும் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், ஆர்.எஸ்.மங்கலம்.
நடவடிக்கை தேவை
ராமநாதபுரம் நகரில் ஒரு சில பகுதிகளில் தெருக்களில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்.
தெருவிளக்குகள் வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கிராமத்துக்கு அருகில் கிருஷ்ணாபுரம் என்ற ஊர் உள்ளது. கிருஷ்ணாபுரம் ஊருணியிலிருந்து கிருஷ்ணா பள்ளி வரை 500 மீட்டருக்கு மேல் இரவில் இருளாகவே காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தேவையான தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனி ஜலாலுதீன், பெரியபட்டினம்.