'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Aug 2023 8:15 PM GMT (Updated: 9 Aug 2023 8:15 PM GMT)

‘தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திண்டுக்கல்

சிதிலமடைந்து வரும் மின்கம்பம்

கோபால்பட்டி பகுதியில் தனியார் மில்லில் இருந்து வேம்பார்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

-ஜெரால்டு, வக்கம்பட்டி.

கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம்

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக வளாகத்தில் திண்டுக்கல் சிறைச்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், திண்டுக்கல்.

பகலில் எரியும் தெருவிளக்குகள்

குஜிலியம்பாறை தாலுகா தி.கூடலூர் கலிக்கப்பட்டியில் பகல், இரவு என 24 மணி நேரமும் தெருவிளக்குகள் எரிகின்றன. இதனால் தெருவிளக்குகள் பழுதடைவதுடன் மின்சாரமும் தேவையின்றி வீணடிக்கப்படுகிறது. எனவே பகலில் தெருவிளக்குகள் எரியாமல் இருக்க மின்சாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சண்முகம், தி.கூடலூர்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

தேனியை அடுத்த சருத்துப்பட்டி இந்திரா காலனியில் சாலையோரத்தில் பள்ளம் உள்ளது. பல மாதங்களாக இந்த பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை விரைவாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தெருவாசிகள், இந்திரா காலனி.

சாக்கடை கால்வாய் சேதம்

கோபால்பட்டி காந்திநகர் பகுதியில் சாலையின் குறுக்காக புதிதாக கட்டப்பட்ட சாக்கடை கால்வாயின் மேல்மூடி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனகள் சாக்கடை கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கால்வாய் முழுமையாக சேதமடைந்து சாலை துண்டிக்கப்படும் நிலை உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-ரவி, கோபால்பட்டி.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

சாணார்பட்டி பள்ளிவாசல் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் சேதமடைந்து வருகிறது. மேலும் கால்வாயில் தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் வழிந்தோடாமல் தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைத்து தூர்வாரும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

-காளிதாஸ், சாணார்பட்டி.

சமுதாய கூடம் தேவை

உத்தமபாளையத்தை அடுத்த கோகிலாபுரம் பகுதியில் சமுதாய கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் ஏழை மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் மண்டபங்களில் நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே கோகிலாபுரம் பகுதியில் சமுதாய கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வராஜ், கோகிலாபுரம்.

சுற்றுலா பயணிகள் அச்சம்

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில் வலது கரை பூங்கா, இடது கரை பூங்கா என இரு பூங்காக்கள் உள்ளன. இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அணை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பூங்கா பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் பூங்காவை விட்டு வெளியேறும் நிலை தொடர்கிறது. எனவே மின்விளக்குகள் போதிய அளவில் எரியச்செய்ய வேண்டும் என்பதோடு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.

-திருமுருகன், தேனி.

அரசு பள்ளி கட்டிடம் சேதம்

வருசநாடு அருகே அரசரடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்து வருகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் சில இடங்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் நீர்க்கசிவும் இருக்கிறது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், அரசரடி.

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

கம்பம் நகராட்சி 5-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்குகிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குரு, கம்பம்.


Next Story