புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

வீணாகும் குடிநீர்

நைனாபுதூரில் மேற்கு கடற்கரை சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இந்த பகுதியில் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தொடர் சம்பவமாக உள்ளது. மேலும், இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-ச.கண்ணன், நைனாபுதூர்.

சீரமைக்கப்படுமா

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் பக்தர்கள் புனித நீராடுவர். இதற்காக அங்கு இரு படித்துறைகள் உள்ளன. இதில் ஒரு படித்துறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், புனித நீராட வரும் பக்தர்கள் இறங்குவதற்கு சிரமப்படுவதுடன், சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேற்கூரை அமைப்பார்களா

குளச்சல் அருகே பிலாக்கோட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 32 மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது பள்ளிக்கூடத்தின் மேற்கூரை மற்றும் சுவர் பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், பள்ளியில் உள்ள இரண்டு கழிவறைகளில் மேற்கூரை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. பள்ளியைச் சுற்றி மாடி வீடுகள் அமைந்துள்ளதால் கழிவறைக்கு செல்லும் மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவிகளின் நலன்கருதி கழிவறைக்கு மேற்கூரை அமைப்பதுடன், பள்ளியின் சேதமடைந்த மேற்கூரையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மேசியா, குமராபுரம்.

நடவடிக்கை தேவை

தேரூர் பேரூராட்சி எஸ்.டி.காலனியில் சிறுவர்கள் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் உள்ள வடிகால் ஓடையில் விடப்படுகிறது. இதனால், கழிவுநீர் அந்த பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையில் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், தேரூர்.

தூா்வார வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேதநகரில் கோட்டார் கால்வாய் உள்ளது. முன்பு அனந்தனார் கால்வாயில் இருந்து தண்ணீர் விடப்பட்டு இந்த கால்வாய் வழியாக பூசாஸ்தான்குளத்துக்கு சென்று வந்தது. தற்போது இந்த கால்வாய் முறையாக பராமரிக்காததால் அந்த பகுதியில் உள்ள சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், வீடுகளில் இருந்து விடப்படும் கழிவுநீரும் இந்த கால்வாயில் தேங்கி அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை தூர்வாரி அனந்தார் கால்வாயில் இருந்து மீண்டும் தண்ணீர் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-புருனோ, வேதநகர்.

வாகன ஓட்டிகள் அவதி

மேல்புறம் சந்திப்பில் வெங்கனாங்கோடு வழியாக கடமக்கோடுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இடைக்கோடு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்துதாஸ், மேல்புறம்.


Next Story