புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-‘
சுகாதாரக்கேடு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சேக்கிழார் தெருவில் ஆங்காங்கே குப்பைக்கூளமாக உள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-முத்துராஜ், சங்கரன்கோவில்.
வாறுகால் தூர்வாரப்படுமா?
கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு நேரு தெருவில் வாறுகாலில் குப்பைகள் தேங்கி அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி குப்பைகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-குமார், சொக்கம்பட்டி.
குண்டும் குழியுமான சாலை
கீழப்பாவூர் யூனியன் சிவநாடானூர் பஞ்சாயத்து 5-வது வார்டு திருமலாபுரத்தில் சுடலைமாட சுவாமி கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-ஜெயபாலன், திருமலாபுரம்.
தெருநாய்கள் தொல்லை
தென்காசி அருகே ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
-மகேஷ், ஆயிரப்பேரி.
எலும்புக்கூடான மின்கம்பம்
செங்கோட்டை தாலுகா தவணை விலக்கு பகுதியில் சாமியார்மடம் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.
-மூக்கையா, தவணை.