புகார் பெட்டி
புகார் பெட்டி
சுவிட்ச் பெட்டி அமைக்கப்பட்டது
கீழ்குளம் பேரூராட்சிக்கு உள்பட்ட இனயம் பழைய பள்ளித்தெரு பகுதியில் சாலையோரம் ஒரு மின் கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் மீட்டர் மற்றும் தெருவிளக்கின் சுவிட்ச் திறந்த நிலையில் காணப்பட்டது. இதனால், மழையில் நனைந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தில் புதிய சுவிட்ச் பெட்டியை பொருத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சுகாதார சீர்கேடு
பறக்கை மெயின் ரோட்டில் உள்ள ஓடை தூர்வாரி சுத்தம் செய்யப்படாத நிலையில் உள்ளது. இதனால் சாக்கடை நீர் தேங்கி நின்று அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஓடையை தூர்வாரி கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகுல், பறக்கை.
சீராக குடிநீர் ேதவை
மணவாளக்குறிச்சி பகுதியில் மாதம்தோறும் குறிப்பிட்ட இரண்டு தினங்கள் நீங்கலாக பிற தினங்களில் காலை வேளைகளில் 2 மணி நேரம் பஞ்சாயத்து குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் பல சமயங்களில் முன்னறிவிப்பு இன்றி திடீரென குறைந்த நேரம் மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியுறுகிறார்கள். எனவே, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.
சாலை சீரமைக்கப்படுமா?
எள்ளுவிளை சந்திப்பில் இருந்து ஆடராவிளை செல்லும் சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-முத்துக்குமார், ஆடராவிளை.
மின் விபத்து அபாயம்
நாகர்கோவில் ராமன்புதூர் 2-வது தெருவில் மின்கம்பியின் மீது தென்னை மரத்தில் இருந்து காய்ந்த ஓலை விழுந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்படுவதுடன், கம்பிகள் அறுந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கம்பியில் விழுந்து தொங்கிய நிலையில் காணப்படும் தென்னை ஓலையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயமணி, ராமன்புதூர்.
சாலையோரம் கொட்டப்படும் குப்பை
நாகர்கோவில் சற்குணவீதியில் வறீது தெரு உள்ளது. இந்த தெருவில் இரவு நேரம் வேறு பகுதியில் உள்ள சிலர் வீடு, கடை, ஓட்டல்களில் உள்ள கழிவுகளை சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதுடன், அங்கு எச்சரிக்கை பதாகைகளை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-பவுஸ்டின், சற்குணவீதி, நாகர்கோவில்.
மின்னழுத்த குறைபாடு
ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட மஞ்சறவிளை, முள்ளுக்காட்டுவிளை, பரவக்காட்டுவிளை ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள வீடுகளில் நீண்டகாலமாக மின் அழுத்த குறைபாடு இருந்து வருகிறது. இதனால் வீடுகளில் உள்ள மின்பொருட்களை இயக்க முடியாக நிலை ஏற்படுவதுடன், அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் மின் அழுத்த குறைபாட்டை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரதீப், ஏற்றக்கோடு.