புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கோயம்புத்தூர்

எச்சரிக்கை பலகை வைக்கப்படுமா?

பொள்ளாச்சி-உடுமலை மெயின் ரோட்டில் கெடிமேடு என்ற இடத்தில் பிரதான பி.ஏ.பி. வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் ஆழம் மற்றும் தண்ணீரின் வேகம் தெரியாமல் வெளியூரை சேர்ந்த பலர் இறங்கி குளிக்கின்றனர். இதனால் அவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் குறிக்க தடை விதித்து அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ், பொள்ளாச்சி.

ரெயில்வே மேம்பாலம் உயர்த்தப்படுமா?

ஊட்டி-குன்னூர் சாலையில் வெலிங்டன் அருகில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் தாழ்வாக உள்ளதால் லாரி போன்ற வாகனங்கள் மேம்பாலத்தில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ரெயில்வே மேம்பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ் கோபால், அரவங்காடு.

குவிந்து கிடக்கும் குப்பைகள் (படம்)

கணபதி சித்தா தோட்டம் கிருஷ்ணராஜ் காலனி கியாஸ் குடோன் ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி, அந்த பகுதியில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

ஜெயராஜ், கணபதி.

விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஞ்சித், சூளேஸ்வரன்பட்டி

கழிப்பிட வசதி வேண்டும்

கூடலூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது. இதனை இரவு நேரங்களில் பூட்டிவிடுவதால், பஸ் நிலையத்துக்கு இரவு நேரங்களில் வரும் பயணிகள் கழிப்பிட வசதி இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்பரவும் அபாயம் உள்ளது. எனவே கூடலூர் பஸ் நிலையத்தில் இரவு நேரத்திலும் கட்டண கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேதீசுவரன், கூடலூர்.

நிறுத்தப்பட்ட டவுன் பஸ் இயக்கப்படுமா?

மருதமலை-ஈச்சனாரி இடையே வடவள்ளி, பேரூர், கோவைப்புதூர், மதுக்கரை வழித்தடத்தில் 67 ஏ என்ற டவுன் பஸ் இயக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் இந்த டவுன் பஸ் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுரேஷ், கோவைப்புதூர்.

சாலையில் செல்லும் கழிவுநீர்

கிணத்துக்கடவு ஒன்றியம் குளத்துப்பாளையம்புதூர் கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் அருகே சாக்கடை கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அதை கடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வருகிறவர்கள் முகம் சுழிக்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவராஜன், குளத்துப்பாளையம்.

குண்டும், குழியுமான சாலை

கோவை காந்திமாநகர் பள்ளிவாசல் வழியாக கணபதிமாநகருக்கு செல்லும் சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மலைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்துதர மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், கணபதிமாநகர்.

குப்பை கிடங்கில் தீ

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள், கழிவுகளை வால்பாறை ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரிக்காமல் மொத்தமாக கொட்டுகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்படுவதால் நச்சு புகை வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை கிடங்கில் தீப்பிடிப்பதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, ரங்கசமுத்திரம்


Next Story