புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Jun 2022 8:22 PM IST (Updated: 9 Jun 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

கோயம்புத்தூர்

சாலை சீரமைக்கப்படுமா?

கோவை-திருச்சி சாலையில் மேம்பால பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. இந்த நிலையில் மேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் இன்னும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இருந்து அல்வேர்னியா பள்ளி வரை பயணம் செய்ய கடும் அவதியாக உள்ளது. மேலும் பள்ளி திறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. எனவே விரைந்து இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோகிலா, சிங்காநல்லூர்.

போக்குவரத்து நெருக்கடி

கோவை-சத்தி சாலையில் கணபதி 3-ம் நம்பர் பஸ் நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம், ஆவாரம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள மூர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் செல்வதற்கும், வருவதற்கும் கூட முடிவதில்லை. இதனால் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றி சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், கணபதி.

தெருவிளக்கு வசதி செய்துதரப்படுமா?

கள்ளப்பாளையம் அருகே சின்னகுயிலி பிரிவில் இருந்து ஆர்.கே.நகருக்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பெண்கள் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் தெருவிளக்கு வசதிகள் செய்துதர சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வி, ஆர்.கே.நகர்.

சாலையில் அபாய குழி

கோவை குட்செட் ரோட்டில் இருந்து அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதைக்கு வரும் சாலை உள்ளது. மேம்பாலத்தை ஒட்டி வரும் இந்த சாலையில் பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் 3 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படவில்லை. 100 மீட்டர் தூரம்தான் இருக்கும் அதைகூட அதிகாரிகள் சரிசெய்யவில்லை எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

கண்ணன், கோவை.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா? (படம்)

பந்தலூர் அருகே உள்ள மூலக்கடை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி பல ஆண்டுகள் ஆவதால், தொட்டியின் கீழ் பகுதியில் சிமெண்டு பூச்சி கீழே விழுந்து பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் குடிநீர் தொட்டி எப்போது விழும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பந்தலூர்.

வாகன ஓட்டிகள் அவதி

பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அனைத்து கனரக வாகனங்களும் இர்வின்ரோடு, ரெயில்வே பீடர் ரோடு வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலை குண்டும், குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை செப்பனியிட வேண்டும்.

ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

பாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள் (படம்)

கோவை மாநகராட்சி 46-வது வார்டு நஞ்சப்பன்வீதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தின் முன்பு சிலர் பாதையை மறித்து தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும் அங்கன்வாடி முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் சிலாப் போடப்படாமல் உள்ளது. இதனால் அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அங்கன்வாடி முன்பு பாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சாக்கடை கால்வாயில் சிலாப் போடுவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

எம்.கல்யாணசுந்தரம், ரத்தினபுரி.

பொதுமக்கள் அச்சம்

கோவை குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீமகாகணபதி கார்டன், பூச்சியூர், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் பல இடங்களில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும் திருட்டு பயம் உள்ளது. எனவே இந்்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தகுமார், ஸ்ரீமகாகணபதி கார்டன்.

போக்குவரத்துக்கு இடையூறு

பொள்ளாச்சி ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சிலர் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் குமாரசாமி லே-அவுட், மாக்கினாம்பட்டியில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலைவாணி சுப்பண்ணன், பொள்ளாச்சி.


Next Story