புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

கன்னியாகுமரி

எரியாத மின்விளக்குகள்

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, சாலை சீரமைக்கப்படாவிட்டாலும் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் பல மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை பொருத்தி எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராசிக், டி.வி.டி.காலனி.

வடிகால் ஓடை தேவை

திட்டுவிளை ஆசாத்நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு உள்ள தெருச்சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மழைநீர் வடிகால் ஓடை அமைத்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.முகம்மதுரபீக், திட்டுவிளை.

அடையாள குறியீடு தேவை

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடசேரி பஸ்நிலையத்தின் சுற்றுவட்ட சாலை உள்ளிட்ட மாநகரின் பல சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் அடையாள குறியீடு வரையப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேகத்தடைகளில் அடையாளக் குறியீடு வரைந்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-சதீஷ், புதுக்குடியிருப்பு.

வீணாகும் குடிநீர்

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பு பழுதாகி உள்ளது. இதனால், குடிநீர் தெரு சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், சாலையில் உள்ள பள்ளங்களில் குடிநீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண், கிருஷ்ணன்கோவில்.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

கோட்டாரில் இருந்து பீச்ரோடு செல்லும் பிரதான சாலையில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அருகில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சாலையில் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.

பழுதான குடிநீர் எந்திரம்

நாகர்கோவில் வடசேரியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த பஸ்நிலையத்தில் இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் பழுதடைந்து பல மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால், பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த எந்திரத்தை அகற்றி விட்டு புதிய எந்திரத்தை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரபீக், வடசேரி.


Next Story