புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி

திருச்சி

அந்தரத்தில் தொங்கும் கண்காணிப்பு கேமரா

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதேபோல் சமயபுரம் கடைவீதிக்கும், அங்கு கூடும் காய்கறி சந்தைக்கும் தினமும் அப்பகுதி மக்கள் நடந்தும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். இந்நிலையில் திருட்டு, வழிப்பறி, விபத்து, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சம்பவங்களை கண்காணிக்கும் வகையில் சமயபுரம் போலீஸ் நிலையத்தின் சார்பில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அப்படி வைக்கப்பட்ட ஒரு கேமரா கம்பம் கடைவீதியின் ஓரத்தில் சாய்ந்த நிலையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது அடிக்கும் காற்றில் எந்த நேரமும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சமயபுரம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், வ.கூடலூர் ஊராட்சியை சேர்ந்த வந்தலை கிராமத்தின் எல்லை முடிவில் நான்கு வழிச்சாலை உள்ளது. அதாவது லால்குடி-பாடாலூர் சாலையின் இடையில் கண்ணாக்குடி, விடுதலைபுரம், பெருவளப்பூர் கிராமங்கள் உள்ளது. இதேபோல் காண கிளியநல்லூர் விடுதலைபுரம் கொளக்குடி ரெட்டிமாங்குடி வழியாக சிறுகனூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை வரை சாலை உள்ளது. இந்நிலையில் வ.கூடலூர் முதல் வந்தலை தொடர்ந்து லால்குடி-பாடாலூர் தேசியநெடுஞ்சாலை இணைப்பு வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை கடந்த 7½ ஆண்டுகளுக்கு முன்பு செப்பனிடப்பட்டது. தற்போது இந்த சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வ.கூடலூர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி நவல்பட்டு காவிரி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை மாற்றிவிட்டு அதற்கு பதில் புதிய மின்கம்பம் நட்டனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், காவிரி நகர்.

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சாம்பட்டி வரதராஜபெருமாள் கோவில் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சாம்பட்டி.

அகற்றப்படாத மரக்கிளைகள்

திருச்சி கருமண்டபம் செல்வநகர் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள 2-வது வீதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களின் ஓரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றும் பணி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் அகற்றப்பட்ட மரக்கிளைகள் சாலையோரம் அப்படியே கிடப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கிளைகள் கழிவுநீர் வாய்க்காலில் அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செல்வநகர்.


Next Story