தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகாருக்கு உடனடி தீர்வு; வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கீழ்பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் வேகத்தடையில் வர்ணம் பூசாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள் என்று ஆவுடையாள்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு கடந்த 14-ந் தேதி செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வர்ணம் பூசியுள்ளனர். கோரிக்கை உடனடியாக நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

எச்சரிக்கை பலகை தேவை

சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் சாலை பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மண்ணால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, எச்சரிக்கை பலகை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாத்துரை, புதுக்குடி.

நூலகத்தை சீரமைக்க வேண்டும்

பரப்பாடியில் அரசு நூலகம் உள்ளது. இந்த நூலகம் தற்போது பழுதடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறது. இந்த நூலகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். கனகராஜ், பரப்பாடி.

மின்மோட்டார் அறை சீரமைக்கப்படுமா?

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு கடம்பன்குளம் வடக்கு தெருவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்டெக்ஸ் தொட்டியின் மின்மோட்டார் அறை இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளது. எனவே, அதனை அகற்றிவிட்டு புதிதாக மின்மோட்டார் அறை கட்டிக் கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மணிகண்டன், கடம்பன்குளம்.

குண்டும், குழியுமான சாலை

நெல்லை அருகே உள்ள மானூரில் இருந்து மாவடி விலக்கு வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். பாலமுருகன், மாவடி.

பயன்பாடு இல்லாத சுகாதார வளாகம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. மற்றொரு சுகாதார வளாகம் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். தமிழ்குமரன், அரியபுரம்.

பழுதடைந்த நூலகம்

பாவூர்சத்திரம் அருகில் உள்ள சிவநாடானூரில் அரசு நூலகம் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேலும் குறைவான நூல்களே இருக்கிறது. இந்த நூலகம் சரிசெய்யப்பட்டால் மாணவர்கள் பயன் அடைவார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? செல்வராமச்சந்திரன், சிவநாடானூர்.

பஸ் வசதி வேண்டும்

வீரகேரளம்புதூர் தாலுகா கீழக்கலங்கல் ஊரில் இருந்து பெரியசாமியாபுரம், பூவலிங்கபுரம், தட்டான்குளம், வென்றிலிங்கபுரம், நடுவக்குறிச்சி வழியாக சங்கரன்கோவிலுக்கு பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, மேற்கண்ட ஊர்கள் வழியாக அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். கணேசன், கீழக்கலங்கல்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் தென்வடல் சந்து புதுரோடு மேல்புறம் உள்ள அடிபம்பை சுற்றி கீழ்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கிடந்தது. இதனால் அதை சுற்றி தண்ணீர் வீணாக கிடப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த அடிபம்பை சுற்றியுள்ள தண்ணீரை அகற்றிவிட்டு, சிமெண்டு பூச்சுகளை சரிசெய்து உள்ளனர். கோரிக்ைக நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

விபத்து ஏற்படும் அபாயம்

ஏரல்-முக்காணி நெடுஞ்சாலையில் வாழவல்லானில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேல்புறம் ஆபத்தான வளைவு சம்பந்தமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது வீசிவரும் பலத்த காற்றால் எச்சரிக்கை பலகை சாலையில் சாய்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த எச்சரிக்கை பலகையை சீராக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? மாரிலிங்கம், தெற்கு வாழவல்லான்.

பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

நெல்லையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூருக்கு காலை 7.10 மணிக்கு அரசு பஸ் சென்று வந்தது. ஆனால், இந்த பஸ் கடந்த சில மாதங்களாக திடீரென்று நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த பஸ்சை நம்பி இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என பலரும் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். எனவே, இந்த பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சார்லஸ், ஆழ்வார்திருநகரி.


Next Story