புகார் பெட்டி


புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டி

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெரு விளக்கு அமைக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் திசையன்விளை- நவ்வலடி சாலையில் அமைந்துள்ள ஆயன்குளம் ரசூல்நகரில் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர். ஆகவே மின்விளக்குகள் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

தேவர்குளம் வீரபுத்திர சுவாமி கோவில் தெருவின் மேல்புறம் பல ஆண்டுகளாக தெருவிளக்கு அமைக்கப்படவில்லை. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எனவே தெரு விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ராமர், தேவர்குளம்.

தீயிட்டு எரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

சேரன்மாதேவி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அழகப்பபுரம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வீடு மற்றும் தெருக்களில் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் அங்கு கொட்டப்படுகின்றன. பின்னர் அந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன், அழகப்பபுரம்.

பஸ் வசதி

நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் உள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தில் 2 பஸ்கள் மட்டுமே காலை வேளையில் செல்கிறது. மற்றபடி பஸ் வசதி கிடையாது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பறவைகள் சரணாலயத்தை பார்வையிடுவதற்கும் போதுமான பஸ்வசதி இல்லை. எனவே முனைஞ்சிப்பட்டி, காடன்குளம் வழியாக செல்லும் திசையன்விளை பஸ்களை மூலைக்கரைப்பட்டியில் இருந்து கடம்பன்குளம், கூந்தன்குளம் வழியாக செல்லுமாறு கூடுதல் பஸ் வசதி செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மணிகண்டன், கடம்பன்குளம்.

குடிநீர் வருமா?

நெல்லை மாவட்டம் மேலப்பாலாமடை அம்மன் கோவில் பின்புறம் தெருவில் அமைந்துள்ள குடிநீர் குழாயில் சுமார் 6 மாத காலமாக தண்ணீர் வரவில்லை. இதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த குழாயில் குடிநீர் வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

காசி, மேலப்பாலாமடை.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரவணசமுத்திரம் செல்லும் ரோட்டில் சாய்ந்த மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்கின்றனர். அந்த சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், கடையம்.

தெருவிளக்கு எரியவில்லை

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தபிள்ளையூரில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் சில மின்கம்பங்களில் விளக்குகளும் பொருத்தப்படவில்லை. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கிறிஸ்டோபர், கருத்தபிள்ளையூர்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வ.உ.சி. தெற்கு தெருவில் அமைந்துள்ள வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை சரிசெய்து கழிவுநீர் சீராக செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

குண்டும் குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 14-வது வார்டு காளியப்ப நாடார் தெருவில் பல வருடங்களாக சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கஜேந்திரன், கோவில்பட்டி.

சாலையின் நடுவே மின்கம்பம்

திருச்செந்தூரில் இருந்து நா.முத்தையாபுரம், மறவன்விளை வழியாக உடன்குடிக்கு செல்லும் சாலையில் மறவன்விளை அம்மன் கோவில் அருகே பல ஆண்டுகளுக்கு நடப்பட்ட இரும்பு மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளது. தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் மின்கம்பத்தை அகற்றாமல் பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே அந்த மின்கம்பத்தால் பலமுறை விபத்துகள் நடந்துள்ளன. எனவே மின்கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்பரிதி, நா.முத்தையாபுரம்.

* குலையன்கரிசல் முதல் பஸ்நிறுத்தம் அருகே மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த சூறைக்காற்று வீசினால் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவி, குலையன்கரிசல்.


Next Story