'தினத்தந்தி' புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
ஒட்டன்சத்திரம் தாலுகா தா.புதுக்கோட்டை ஸ்டாலின்நகரில் உள்ள பிரதான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
-ஆனந்த், ஸ்டாலின்நகர்.
பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டி
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டை பகுதியில் உள்ள மயானத்தில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது. தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாததால் இறுதி சடங்கு செய்ய மயானத்துக்கு வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
-ரங்கசாமி, நீலமலைக்கோட்டை.
ரெயில் இயக்க வேண்டும்
தேனியில் இருந்து சென்னைக்கு ரெயில் சேவை தொடங்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. இதனால் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ரெயில் சேவையை விரைவில் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பக்ருதீன், உத்தமபாளையம்.
எரியாத தெருவிளக்குகள்
பழனி இட்டேரி ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளில் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. ஒருசில மின்விளக்குகள் மட்டுமே இரவில் எரிகின்றன. இதனால் அந்த ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே எரியாத மின்விளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்.
-பார்த்திபன், பழனி.
குப்பைகளை தீவைத்து எரிப்பதால் அவதி
திண்டுக்கல்லை அடுத்த அடியனூத்து பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அந்த குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதுடன் அவற்றுக்கு தீ வைத்து எரிப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழ்பிரியன், திண்டுக்கல்.
இரவில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு
திண்டுக்கல்லை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு, பகல் நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் இருக்கும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
-ராஜ்குமார், பாலகிருஷ்ணாபுரம்.
அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம்
கம்பம் உழவர் சந்தை அருகே உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிட சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்சாரி, கம்பம்.
கேபிள் இணைப்பு துண்டிப்பு
வருசநாட்டில் இருந்து வாலிப்பாறைக்கு செல்லும் வழியில் உள்ள அரசு கேபிள் இணைப்புகளை மர்ம நபர்கள் சிலர் அவ்வபோது துண்டித்து விடுகின்றனர். இதனால் கிராமங்களில் கேபிள் மற்றும் இணையதள சேவை பாதிப்படைகிறது. எனவே கேபிள் இணைப்பை துண்டிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிராம மக்கள், வாலிப்பாறை.
புதர்மண்டி கிடக்கும் சாலை
கடமலைக்குண்டு-அண்ணாநகர் இடையே அமைந்துள்ள தேனி பிரதான சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே புதர்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-பொதுமக்கள், கடமலைக்குண்டு.
-----------------
உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்